வயநாட்டில் நிலச்சரிவு: கடன் தள்ளுபடி செய்ய மறுத்த மத்திய அரசு! நீதிபதிகள் கடும் கண்டனம்!
Wayanad Landslide: வயநாட்டில் நிலச்சரி பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவால், மக்கள் தங்களுடைய வீடுகளையும் விவசாய நிலங்களையும் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பல விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து விவசாயத்திற்காக வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த சூழலில் அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே ஜெய்சங்கரன் நம்பியார் மற்றும் பி.எம்.மனோஜ் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில்மனுவில், கடன்தள்ளுபடிக்கான கோரிக்கையை ஏற்க அரசிடம் சட்டப்பூர்வமான கடமை இல்லை. இத்தகைய கடன் தள்ளுபடிகள் அனைத்தும் நிதி நிறுவனங்களின் முடிவுகள் மற்றும் நிதி சார்ந்த நிலைப்பாடு அடிப்படையிலேயே உருவாகும்.
மாநில அரசோ அல்லது பசுமை நிதியமைப்புகளின் வாயிலாகவோ உதவிகள் அளிக்கப்படும் என்றால் அது தனிப்பட்ட முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளது. நிதி அமைச்சகம் தாக்கல்செய்த அறிக்கையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கருணை மனப்பான்மையுடன் அரசு கவனம் செலுத்துகிறது. ஆனால், கடன் தள்ளுபடி என்பது ஒரு விதமான பொதுக் கொள்கையாக அமைய முடியாது எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
நிலச்சரிவு, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது, மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் மட்டுமே அரசின் பொறுப்பாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பதிலால் நீதிபதிகள் கடும் கோபத்திற்கு உள்ளானார்கள். இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் ஏ.கே ஜெய்சங்கரன் நம்பியார் மற்றும் பி.எம்.மனோஜ், இது உங்கள் கொள்கை முடிவாக இருக்கலாம். ஆனால், அதை நேராகத் தெரிவியுங்கள். அதிகாரம் இல்லையென்று சொல்லி ஒளிந்து கொள்ளாதீர்கள். உங்களிடம் அதிகாரமில்லை என்று கூறுவதை விட, இதை செய்ய விருப்பமில்லை என்று நேராகச் சொல்லுங்கள்.
நீங்கள் அதிகாரமே இல்லை என்று கூறுகிறீர்கள். ஆனால் நாங்கள் பார்க்கும் போது, உங்களிடம் அதிகாரம் உள்ளது. அது பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் இல்லாவிட்டாலும், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 73 படி உங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து மத்திய அரசு கடன் தள்ளுபடி தொடர்பான தெளிவான நிலைப்பாட்டைக் குறித்து மறு பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.





















