ஏங்க.. கூமாப்பட்டியை விடுங்க.. விருதுநகரில் சுத்திப்பார்க்க இவ்ளோ இடம் இருக்குதா!
விருதுநகர் மாவட்டத்தில் கூமாபட்டி மட்டுமின்றி சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளது. அவற்றை கீழே காணலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கூமாபட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர் தங்கபாண்டி. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூமாபட்டி கிராமத்தின் அழகை வர்ணித்து வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் பிரபலமாகி பலரும் அங்கு படையெடுக்கத் தொடங்கினர். ஆனால், கூமாபட்டி கிராமத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவு சில விஷயங்கள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் சுற்றிப் பார்க்க ஏதுவான இடங்கள் குறித்து கீழே காணலாம்.
1. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில்:
தமிழக அரசின் இலச்சினையில் இருக்கும் அடையாளமே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், மிகவும் புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். ஆன்மீக பயணம் செல்ல விரும்புபவர்கள் இங்கு செல்லலாம்.
2. அய்யனார் அருவி:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து 14 கி.மீட்டர் தொலைவில் இந்த அய்யனார் அருவி அமைந்துள்ளது. இந்த அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது சென்று குளித்தால் இதமாக இருக்கும்.
3. செண்பகத்தோப்பு சரணாலயம்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ளது செண்பகத்தோப்பு சரணாலயம். சாம்பல் நிற பெரிய அணில்கள் இங்கு அதிகளவு வசிக்கின்றன. மான்களும், செந்நாய்களும் இங்கு காணப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த சரணாலயத்தில் காட்டழகர் கோயில், வனப்பேச்சி அம்மன் கோயில், மீன்வெட்டிப்பாறை அருவி சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் இடம்.
4. சஞ்சீவி மலை:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜப்பாளையத்தில் அமைந்துள்ளது இந்த சஞ்சீவி மலை. ராமாயணத்தில் அனுமன் லட்சுமணன் உயிரைக் காப்பாற்ற இந்த மலையில் இருந்து மூலிகை எடுத்துச் சென்றதாக புராணங்கள் கூறப்படுகிறது. புனித மலையான இங்கு பழமையான பாறை ஓவியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலை இது.
5. சதுரகிரி மலை:
வெள்ளியங்கிரி மலைக்கு நிகரான ஒரு மலையாக கருதப்படுவது சதுரகிரி மலை. விருதுநகர் மாவட்டம் வத்ராயிப்பு அருகே தாணிப்பாறை பகுதியில் இந்த மலை அமைந்துள்ளது. ஆன்மீக சுற்றுலா தளமான இங்கு மிகவும் சிரமம் வாய்ந்த அந்த பாதையில் பக்தர்கள் மலை மீது உள்ள சுந்தர மகாலிங்கனாரையும், சந்தன மகாலிங்கனாரையும் வணங்க செல்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலைப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
6. பூமிநாத சுவாமி கோயில்:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது பூமிநாதசுவாமி கோயில். ரமண மகரிஷி அவதரித்தது இந்த திருச்சுழியில்தான். புகழ்பெற்ற இந்த கோயில் மிகவும் பழமை வாய்ந்த கோயில் ஆகும்.
7. பிளவக்கல் அணை:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அமைந்துள்ளது பிளவக்கல் அணை. விருதுநகரில் இருந்து 59 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மழை காலங்களில் தண்ணீர் கடல்போல இங்கு காட்சி தரும்.
8. சிவகாசி காசி விஸ்வநாதர் ஆலயம்:
அப்போதைய பாண்டிய மன்னன் ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன் வாரணாசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து தற்போதைய சிவகாசியில் வைத்து பூஜித்து வழிபட்டார். அந்த கோயிலே காசி விஸ்வநாதர் கோயில். மிகவும் புகழ்பெற்றது இந்த கோயில்.
9. இருக்கன்குடி மாரியம்மன் கோயில்:
தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்று இருக்கன்குடி மாரியம்மன் காேயில். வைப்பாறு மற்றும் அர்ச்சனா நதி ஆகிய இரு நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைந்துள்ள இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆற்று மணலில் அழகாக குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் கோயிலுக்கு அருகே 22 அடி உயரத்தில் ஒரு அணை உள்ளது. சாமி தரிசனத்துடன் சுற்றிப்பார்க்கவும் இந்த இடம் ஏற்ற இடம் ஆகும்.





















