தேனி மாவட்டத்தில் அனுமதியின்றி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்; தடுத்து நிறுத்திய போலீசார்
நேரு சிலை சிக்னல் அருகில் அந்த ஊர்வலம் வந்தபோது, அனுமதியின்றி ஊர்வலம் செல்வதாக கூறி ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தேனி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரியகுளத்தில் 90க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கொட்டும் மழையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது. பாதுகாப்பில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 90க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு அந்தந்த பகுதியில் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
இதில் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள காமட்சிபுரம், எ.புதுப்பட்டி, தாமரைக்குளம், T. கள்ளிப்பட்டி, வடுகபட்டி, மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதியில் 60 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை அடுத்து பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பெரியகுளம் வடகரை புதிய பேருந்து நிலையம் பிரிவு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பின்பு பெரியகுளத்தின் முக்கிய வீதிகளான அரண்மனை தெரு, வி.ஆர்.பி தெரு, மற்றும் தென்கரை சுதந்திர வீதி, அக்ரகாரம், உள்ளிட்ட வீதிகளில் கொட்டும் மழையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்பு பெரியகுளம் பாலசுப்ரமணி கோவில் அருகே உள்ள வராகநதி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல் தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட 15 சிலைகள் மஞ்சளார் ஆற்றிலும், ஜெயமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைக்கப்பட்ட 15 சிலைகள் வராக நதி ஆற்றிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
Canada Diplomat: 5 நாட்கள் தான் அவகாசம்..! கனடா தூதர் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவு
சிவசேனா கட்சி சார்பில் தேனி பெரியகுளம் சாலையில் வெற்றிக்கொம்பன் விநாயகர் கோவில் முன்பு இருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள், ஒரு விநாயகர் சிலையை தலைச்சுமையாக ஊர்வலமாக எடுத்து வந்தனர். அந்த சிலையை அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாறு வரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப் போவதாக கூறினர்.
நேரு சிலை சிக்னல் அருகில் அந்த ஊர்வலம் வந்தபோது, அனுமதியின்றி ஊர்வலம் செல்வதாக கூறி ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் விநாயகர் சிலை மற்றும் சிவசேனா கட்சியினரை ஒரு மினிவேனில் ஏற்றி, அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் அந்த சிலை ஆற்றில் கரைக்கப்பட்டது. இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.