வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொல்லியல் பணி
தொல்லியல் அகழாய்வுப் பணி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024- 25ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடங்கி வைத்திருந்தார். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. 6-ம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
தமிழ்நாடு தொல்லியல் பணி
1. கீழடி மற்றும் அதன் அருகிலுள்ள தொல்லியல் தளமான கொந்தகை, சிவகங்கை மாவட்டம் - பத்தாம் கட்டம் 2. வெம்பக்கோட்டை, விருதுநகர் மாவட்டம் மூன்றாம் கட்டம் 3. கீழ்நமண்டி, திருவண்ணாமலை மாவட்டம் இரண்டாம் கட்டம் 4. பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் கட்டம் 5. திருமலாபுரம், தென்காசி மாவட்டம் - முதல் கட்டம் 6. சென்னானூர், கிருஷ்ணகிரி மாவட்டம் - முதல் கட்டம் 7. கொங்கல்நகரம், திருப்பூர் மாவட்டம் முதல் கட்டம் 8. மருங்கூர், கடலூர் மாவட்டம் - முதல் கட்டமாகும் இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 3ம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை, சுடுமண் முத்திரை, நுட்பமான முறையில் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்கள் ஆகிவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் நடைபெறும் பகுதி
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அடுத்த விஜயகரிசல்குளத்தில் கடந்த 5 ஆயிரம் ஆண்டு நுண்கற்காலத்தை அறியும் வகையில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை சூது பவளம், தங்க நாணயம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, பழமையான கற்கள் உள்ளிட்ட 3210-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உருண்டை வடிவ மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கலைநயமிக்க சங்கு வளையல் உள்ளிட்ட அணிகலன்கள், அலங்கார பொருட்களை மெருகேற்ற இக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.