வரிச்சியூர் செல்வம் கூட்டாளி வர்க்கீஸ் கைது: அடுத்த நாளே மரணம்! திண்டுக்கல்லில் பரபரப்பு
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வத்தலகுண்டு பகுதியில் பதுங்கி இருந்த வரிச்சியூர் செல்வத்தை கடந்த மாதம் கைது செய்தனர்.
பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை தி.மு.க பிரமுகர் கதிரவனைக் கடத்தி ஒரு கும்பல் பணம் பறித்தது. மேலும் அந்தக் கும்பல், திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார், திண்டுக்கல்லில் ஒரு தங்கும் விடுதியில் சோதனையிட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சினோஜ் (32) உயிரிழந்தார்.
இந்த வழக்கில், மதுரையைச் சேர்ந்த வரிச்சியூர் செல்வம் (57), கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த அஜித், எர்ணாகுளத்தைச் சேர்ந்த வர்க்கீஸ் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேர் மீதும், திண்டுக்கல் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஆனால் வரிச்சியூர் செல்வம், வர்க்கீஸ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கில் வரிச்சியூர் செல்வம் (57) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி பிரதீப் உத்தரவின் பேரில் நகர் டிஎஸ்பி கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வத்தலகுண்டு பகுதியில் பதுங்கி இருந்த வரிச்சியூர் செல்வத்தை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கேரளாவில் வைத்து வர்க்கீசை, திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே வர்க்கீஸ் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















