வைகுண்ட ஏகாதசி: தேனியில் சொர்க்க வாசல் திறப்பு! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச தரிசனம்!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள பெருமாள்சாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு.
தேனி அல்லிநகரம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில், இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதலே ஏராளமான பொதுமக்கள் சொர்க்கவாசல் கதவின் முன்பாக அமர்ந்து நீண்ட நேரமாக சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து, சுமார் 5.30 மணியளவில் சொர்க்கவாசல் கதவுகள் திறக்கப்பட்டு உற்சவர் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக கூடியிருந்த ஏராளமான பொதுமக்களுக்கு காட்சியளித்தார்.
சொர்க்கவாசல் வழியாக காட்சி தந்த பெருமாளை 'கோவிந்தா கோவிந்தா' என கோஷங்கள் எழுப்பி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர், சப்பரத்தில் கோவில் வளாகத்தை சுற்றிய உற்சவர், மீண்டும் சன்னதியை அடைந்தார். உற்சவர் பெருமாள் கிரீடத்துடன் ஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து உற்சவருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்துச் சென்றனர்.
இதேபோல் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 5.30 மணி அளவில் சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டனர். அதன் பின்பு, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாள் திருக்கோளத்தில் பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ”ரெங்கா ரெங்கா” என கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள் சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது. பின்னர், கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
மேலும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெருமாள்சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக வைகை அணையில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெருமாள் சாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் பக்தர்களின் ”கோவிந்தா கோவிந்தா” கோஷங்களுடன் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சொர்க்க வாசல் வழியாக வெளிவந்த பெருமாள்சாமியை பக்தர்கள் ”கோவிந்தா கோவிந்தா” கோஷம் முழங்க பூக்கள் தூவி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பெருமாள் சாமி ஊர்வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தார். சொர்க்க வாசலை வணங்கி வாசல் வழியாக ஏராளமான பக்தர்கள் வெளிவந்தனர். பின்னர்கோவிலில் அனைவருக்கும் துளசி தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது.





















