மேலும் அறிய
Advertisement
ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்பு !
பாராளுமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைகோ, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், கனிமொழி கருணாநிதி உள்ளிட்டோர் ரயில்வே தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பு.
ரயில்வே நிர்வாகத்துடன்தென் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மதுரை ரயில்வே காலனியில் நடைபெற்றது. தெற்கு ரயில்வே பொது மேலாளர் பொறுப்பு வகிக்கும் கோபிநாத் மல்லையா தலைமை வகித்தார். ரயில்வே நிர்வாகம் சார்பாக முதன்மை போக்குவரத்து மேலாளர் நீனு இட்டியரா, முதன்மை வர்த்தக மேலாளர் ரவி வல்லூரி, ரயில்வே கட்டுமான நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா, கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். பாராளுமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வைகோ, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், கொடிக்குன்னில் சுரேஷ், எஸ்.ஞான திரவியம், எஸ்.திருநாவுக்கரசர்,
தனுஷ் எம். குமார், பி.வேலுச்சாமி, முகமது அப்துல்லா, ஏ.விஜயகுமார், சோமபிரசாத், பி.ரவீந்திரநாத், கனிமொழி கருணாநிதி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ரயில்வே திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தெற்கு இரயில்வேயின் மதுரைக் கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மதுரையில் நடைபெற்றது.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 18, 2021
தேஜஸ் ரயிலை தாம்பரத்தில் நிறுத்துவது, அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ஒட்டன்சத்திரத்தில் நிறுத்துவது உள்ளிட்டு பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. #Railway pic.twitter.com/d3bMRDFU1u
இந்நிலையில் இது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...,” புதிய இரயில்கள், ரயில் தட மேம்பாடு, ரயில் நிலையங்களின் மேம்பாடு, பயணிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். இதில் பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது மகிழ்வை அளிக்கிற செய்தி. தேஜஸ் ரயில் சென்னை செல்லும் போதும், சென்னையில் இருந்து திரும்பும் போதும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். அதற்கு அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு அதற்கான ஒப்புதலுக்காக இரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை - திருவனந்தபுரம் ஒட்டன்சத்திரம் வழியாக செல்லும் அமிர்தா விரைவு இரயிலை காய்கறி, பழ விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரினோம். அதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு பரிந்துரையை செய்துள்ளது தென்னக இரயில்வே. இது மிக முக்கியமான வெற்றி.
மதுரை- போடி- தேனி- வழியாக சென்னை செல்லும் வகையில் ரயில்வே தடம் நீட்டிக்கப்பட்டு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அந்த கோரிக்கையில் மிக முக்கிய வெற்றி கிடைத்துள்ளது. 20601 / 20602 எண் கொண்ட வாரத்திற்கு மூன்றுமுறை இயங்கும் ரயிலுக்கான கோரிக்கை ஏற்கப்பட்டு ஒப்புதலுக்காக ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை ரயில் சந்திப்பிற்கும் பெரியார் பேருந்து நிலையத்திற்கும் பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மதுரை ரயில் சந்திப்பின் முதலாவது நடைமேடையிலிருந்து கீழ்தளச் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தோம். அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கான துவக்கநிலை முயற்சியாக மதுரை மாநகராட்சி நிர்வாகத்தோடு இணைந்த கூட்டமும் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மதுரை இரயில் நிலையச் சந்திப்பில் மீன் சின்னத்தை நிறுவ வேண்டும் என வலியுறுத்தி அதற்கான பணிகளை மேற்கொண்டோம். இன்று நடைபெற்ற இரயில்வே ஆய்வுக்கூட்டத்தில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான சீசன் வழங்கிட நடவடிக்கை எடுக்க கோரினோம். மீண்டும் சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை - மேலூர் - காரைக்குடி வழித்தடத்தில் புதிய இரயில் திட்டத்தினை அறிவிக்கக் கோரினோம். அதற்கு பதில் அளித்துள்ள இரயில்வே அந்த திட்டத்திற்கான புதிய வழித்தடம் 85.7 கி.மீ என ஆய்வு செய்யப்பட்டு அதற்கான திட்டமதிப்பாக ரூ.649.5 கோடியாக கணக்கிட்டு 27/11/2014 அன்றே இரயில்வே வாரியத்திற்கு அனுப்பியுள்ளது. ஆனால் அந்தத் திட்டம் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் இன்னும் ரயில்வே வாரியம் நிலுவையில் வைத்துள்ளது.
அதே போல காரைக்குடி - திண்டுக்கல் - நத்தம் வழியிலான புதிய வழித்தடமும் ஆய்வு செய்யப்பட்டு திட்டமதிப்பாக ரூ1314.29 கோடி கணக்கிடப்பட்டு கடந்த 06/07/2015 அன்றே ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டு அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவையெல்லாம் மதுரை மக்களுக்கு மிகவும் அவசியமான திட்டங்கள்.
இந்தத் திட்டங்களை துவங்கிட வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி உள்ளேன். அதேபோல ரயில்வே குறித்து இன்னும் பல கோரிக்கைகளையும், மதுரையை மையமாக கொண்ட பல திட்டங்களையும் செயல்படுத்திட தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion