தேனியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரபரப்பு: பெண் தர்ணா போராட்டம் - காரணம் என்ன?
கலைஞர் வீடு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அரசு அதிகாரிகள் தடையாக இருப்பதாக கூறி மனு அளிக்க வந்த பெண்ணை தடுத்து நிறுத்தியதால் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகாம் பெருந்திட்ட வளாகத்தில் துணை முதல்வர் உதயநிதி இன்று பல்வேறு அரசு துறைகள் சார்பில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதுடன் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். ஆய்வு கூட்டத்திற்கு பிறகு துணை முதல்வர் உதயநிதி புதிய வழித் தடங்களில் மினி பஸ் சேவைகள் துவங்கி வைத்தார். வீரபாண்டி அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தார். பின் மதுராபுரியில் உள்ள தனியார் மஹாலில் நடக்கும் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

தேனி மாவட்டத்தில் 851 பயனாளிகளுக்கு 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். மூன்று வழித்தடங்களில் 9 மினி பேருந்துகள் சேவையை கொடியசைத்தும் துவக்கி வைத்தார். தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் மாவட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு மாவட்டத்திலுள்ள திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் .
பின்னர் ஆதிதிராவிடர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட 23 துறைகளை சேர்ந்த 851 பயனாளிகளுக்கு 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து தேனி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் வசதிக்காக மூன்று வழித்தடங்களில் 9 மினி பேருந்து சேவையை உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் வந்து கொண்டனர்.
இந்த நிலையில் தேனியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கலைஞர் வீடு திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அரசு அதிகாரிகள் தடையாக இருப்பதாக கூறி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க வந்த பெண்ணை தடுத்து நிறுத்தியதால் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தேனி மாவட்டம் கடமலைகுண்டு ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர் ஷீலா (53) இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு மனு கொடுத்த நிலையில் வீடு கட்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் ஷீலாவின் உறவினர் காவல் அதிகாரியாக இருக்கும் ராஜசேகரன் அந்த நிலத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி ஷீலாவிற்கு வீடு வழங்கக்கூடாது என தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது .
இதனை அடுத்து ஷீலா மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது . அதனைத் தொடர்ந்து இன்று தேனி மாவட்ட அரசு நிகழ்ச்சிக்காக வருகை தந்த துணை முதல்வரிடம் கோரிக்கை மனுவை கொடுப்பதற்காக ஷீலா வந்தார். அப்போது அவரை துணை முதலமைச்சரை சந்திக்க விடாமல் காவல்துறையினர் ஷீலாவை தடுத்து நிறுத்தியதால் தனது ஆவணங்களை தரையில் போட்டு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி கண்ணீருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை அடுத்து அவர் காவல் அதிகாரிகள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர் .துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.





















