பூட்டுக்கு பெயர் போன திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று 36 ஆவது பிறந்தநாள்...!
’’திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வந்தது’’
மா, பலா, வாழை என முக்கனிகள் விளைந்து, முத்திரை பதிக்கும் பழனியிலே, மலைகளின் இளவரசியான கொடைக்கானலை தன்னகத்தே கொண்ட திண்டுக்கல் மாவட்டம் இன்று 36 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மதுரை மாவட்டத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டை கிளவியாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து 1985ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தனி மாவட்டமாக அறிவித்து முதல் மாவட்ட ஆட்சியர் எம்.மாதவன் நம்பியாரை அறிவித்தார் அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர். திண்டுக்கல் மாவட்டம் சில காலம் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, கொடைக்கானல் மலை, பழனி மலை ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. மேலும் ஆடலூர், பன்றி மலை, கந்தமலை என மலைகளால் சூழப்பட்டுள்ளது. பார்க்க ரம்மியமாக விவசாயமே முக்கிய தொழிலாகவும், சிறு தொழில் நிறுவனங்களையும் கொண்டு தக்க பெருமையுடன் திண்டுக்கல் மாவட்டம் விளங்குகிறது.
திண்டுக்கல் நகரம் இரும்பு பூட்டுகள், மற்றும் இரும்பு பாதுகாப்பு பெட்டகங்கள் உற்பத்தி செய்வதில் பெயர் பெற்ற நகரமாகும் விளங்குகிறது. கூட்டுறவு துறையின் கீழ் ஒரு பூட்டு உற்பத்தி பிரிவு செயல்படுகிறது. திண்டுக்கல்லில் குறிப்பிட்டுள்ள மற்றொரு தொழில் தோல் பதனிடுதல் ஆகும். மதுரை-திண்டுக்கல் சாலையில் திண்டுக்கல் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் சின்னாளபட்டி உள்ளது. கைத்தறி தொழிலில் பெயர் பெற்று விளங்குகின்றது. சின்னாளபட்டியில் தயாரிக்கப்படும் ஆர்ட்-சில்ஸ்க் சாரிஸ் மற்றும் சுங்கடி சேலைகள் ஆகியவை இந்தியா முழுவதும் புகழ் பெற்று விளங்குகிறது. மாங்காய் விளைச்சலுக்கு நத்தமும் ,பூ விளைச்சலுக்கு நிலக்கோட்டையும் சிறப்பு பெற்றதாகும்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் மாநில அளவில் அதிக வருவாய் ஈட்டும் கோயிலாக உள்ளது. தைப்பூசம், ஆடி-கிருதிகை, பாங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், வைகாசி விசாகம் மற்றும் மாதாந்திர கார்த்திகை போன்ற பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
பழனி முருகன் கோயிலைத் தவிர 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள திருமலைக்கேணி முருகன் கோயிலும் வளர்ந்து வரும் யாத்திரை மையமாக மாறி வருகிறது. திண்டுக்கல் நகரிலுள்ள அபிராமி அம்மன் கோயில் மற்றும் தெத்துபட்டியில் உள்ள ராஜா காளியம்மன் கோயில் ஆகியவை மாவட்டத்தின் முக்கிய கோயில்களாக உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான உலகபுகழ் பெற்ற கொடைக்கானல், கோடைக்கால வாசஸ்தலமாக திகழ்கிறது இது 2133 மீட்டர் உயரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள கொடைக்கானல் பகுதி “மலைகளின் இளவரசி” என அழைக்கப்படுகிறது. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கொடைக்கானலுக்கு வருவது வழக்கமாக உள்ளது.
தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!