மேலும் அறிய
Advertisement
குழந்தைகளை பாலியல் தொல்லையில் இருந்து காக்க புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம்
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் தேவைக்கேற்ப புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மதுரையைச் சேர்ந்த வெரோணிக்காமேரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்சோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதனால் பள்ளிப் பயிலும் பெண் குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனை தடுக்க தமிழ்நாடு அரசு 2012 ஆம் ஆண்டு அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதன்படி மாணவ, மாணவிகளுக்கு மன ரீதியான அழுத்தத்தை போக்கி, கவுன்சிலிங் வழங்க மொபைல் மனநல ஆலோசனை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால், அதனை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை.
இது தொடர்பாக பல முறை மனு அளித்தும் நடவடிக்கையும் இல்லை. எனவே, 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின்படி அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் மொபைல் மனநல ஆலோசனை மையங்களை அமைத்து மாணவ மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, "பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது.பாலியல் துன்புறுத்தல் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பாதிக்கின்றது. தமிழக அரசு சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தவும், கொள்கைகளை உருவாக்கவும் உதவும் வகையில், இந்த நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பிக்கின்றது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழாத வண்ணம், கொள்கைகளை உருவாக்கி அதன் நகல்களை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் புகார் தெரிவிப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் உரிய நடைமுறை வகுக்கப்பட வேண்டும். இதனை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை அமைக்க வேண்டும். அக்குழு விழிப்புணர்வு நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்த வேண்டும். அக்குழு மனநல ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மற்றொரு வழக்கு
2021-ல் வழங்கப்பட்ட கலைமாமணி விருது தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கியதை திரும்ப பெற கோரிய வழக்கை தீர்ப்பிற்காக ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக கலை மற்றும் பண்பாடு துறை மூலமாக இளைஞர்களுக்கு இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற கலைகள், ஓவியம் மற்றும் சிற்பக்கலை கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
கலைமாமணி விருது 5 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது. 18 வயது கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 முதல் 35 வயது வரை "கலை வளர்மதி" விருதும், 36 முதல் 50 வயது வரை "கலை சுடர்மணி" விருதும், 51 முதல் 60 வயது வரை "கலை நன்மணி" விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு "கலை முதுமணி" விருதும் வழங்கப்படுகிறது. கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, எந்தவித தகுதியோ, எந்தவித நெறிமுறையோ இன்று வரை வகுக்கப்படவில்லை.
2019-2020ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20.02.2021 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. இதில் தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கிய சான்றிதழில் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசரக் கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது 2021-ல் வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், 2019 - 2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion