Theni: விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்.. சேதமடைந்த ஆயிரம் வாழைகன்றுகள்!
ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. கூடலூர் அருகே உள்ள வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுப்பன்றி, காட்டு யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்த விலங்குகள் கடந்த சில மாதங்களாகவே கூடலூர் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இதனால் விவசாயிகள் இரவு நேரம் தோட்டங்களில் காவல் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு, வேலாங்காடு புலம் பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன.
EPS: “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; கூட்டணி இதனால்தான்...” - இபிஎஸ் திட்டவட்டம்
அப்போது அங்குள்ள ராஜேந்திரன் என்பவரது தோட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின. அதுமட்டுமின்றி சோள பயிரையும் சேதப்படுத்தியுள்ளது. பின்னர் கூடலூரை சேர்ந்த ரமேஷ் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து 600-க்கும் மேற்பட்ட வாழைகள், 10 தென்னைமரங்களையும், சுதாகர் என்பவரது தோட்டத்தில் பூச்செடிகள், சொட்டுநீர் பாசன குழாய்கள், வைஜெயந்தி என்பவரது தோட்டத்தில் தென்னை மரங்களையும் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளன. விடிய, விடிய அந்த தோட்டங்களுக்குள் முகாமிட்டிருந்த காட்டு யானைகள், நேற்று அதிகாலை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதற்கிடையே காலையில் தங்களது தோட்டங்களுக்கு வந்த விவசாயிகள், வாழை, சோளம், தென்னை உள்ளிட்ட பயிர்கள் நாசமாகி இருப்பதை கண்டு வேதனை அடைந்தனர். இதனால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூடலூர் விவசாயிகள் கூறுகையில், வனவிலங்குகள் அட்டகாசம் குறித்து சமீபத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவித்திருந்தோம். அப்போது, விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் வராமல் தடுக்க வனப்பகுதியையொட்டி அகழிகள் அமைக்கவும், சோலார் மின்வேலி கம்பிகள் அமைக்கவும் வலியுறுத்தினோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது 1,000-க்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்திவிட்டன. கடந்த ஒருவார காலமாக பளியன்குடி மற்றும் சுருளியாறு மின் நிலையம் செல்லும் சாலை பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள், தற்போது விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்