4ஆவது முறையாக 142 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை
’’கடந்த மாதம் 29 ஆம் தேதி கேரள நீர்பாசன துறை அமைச்சர் ரோஸின் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் தமிழகத்திற்கு தெரியாமல் அணையில் 136 அடி இருக்கும் போதே தண்ணீரை திறந்து விட்டதாக புகார் எழுந்தது’’
தமிழக-கேரள இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீர் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. முல்லை பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 155 அடி ஆகும் 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ளலாம் என்றும், பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று மிக்க சிறப்பு தீர்ப்பு அளித்தது.
இதனை தொடர்ந்து அணையில் இதுவரையில் 3 முறை 142 அடி வரையில் தண்ணீர் தேக்கப்பட்டது. கடந்த மாதம் முல்லை பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கன மழையால் அணையின் நீர் மட்டம் விரைவாக உயர தொடங்கியது. இந்த நிலையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கேரள நீர்பாசன துறை அமைச்சர் ரோஸின் அகஸ்டின் தலைமையிலான அதிகாரிகள் தமிழகத்திற்கு தெரியாமல் அணையில் 136 அடி இருக்கும் போதே தண்ணீரை திறந்து விட்டதாக புகார் எழுந்தது. இதற்கு பதில் அளித்த தமிழக நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் Rule Curve விதிமுறைப்படிதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது என பதிலளித்தார்.
தற்போது தொடரும் வடகிழக்குப் பருவமழையால் பெரியாறு அணை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.55 மணிக்கு 142 அடியை எட்டியது. இதையடுத்து, அணையில் இருந்து விநாடிக்கு 2300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டமானது 142 அடியை எட்டியவுடன் அபாய ஒலி அடித்து இறுதிகட்ட எச்சரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 142 அடிக்கு மேல் அணைக்கு வரும் நீரானது முழுவதுமாக உபரிநீராக திறந்துவிடப்படும். தற்பொழுது நீா் இருப்பு 7,666 (7.6 டி.எம்.சி) மில்லியன் கன அடியாக உள்ளது.
பெரியாறு அணையில் 142 அடி வரை நீர்த்தேக்க கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து 2014, 2015 மற்றும் 2018ம் ஆண்டுகளில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டோடு நான்காவது முறையாக அணை 142 அடியை எட்டியதால் ஐந்து மாவட்ட பொது மக்கள், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரியாறு அணையின் உறுதித்தன்மை தொடர்ந்து நிறுபிக்கப்பட்டு வருவதால் பேபி அணையை பலப்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்