தேனி: காட்டெருமை தாக்கி ஒருவர் உயிரிழப்பு! பெண் ஒருவர் படுகாயம்
உத்தமபாளையம் அருகே தென்னந்தோப்பிற்குள் காட்டெருமை தாக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டி பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சண்முகா நதி அணை அமைந்துள்ளது. கம்பம் கிழக்கு வனத்துறை கண்காணிப்பின் கீழ் இந்த பகுதி முழுவதும் உள்ளது.இந்நிலையில் அவ்வப்போது இந்த சண்முகா நதி அணையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி முழுவதும் காட்டெருமை, மான் போன்ற விலங்கினங்கள் வாழ்ந்து வருகிறது. இதற்கிடையே இன்று காலையில் வழி தவறிய காட்டெருமை ஒன்று அருகே உள்ள ராயப்பன்பட்டியில் இருந்து அணைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தோட்ட பகுதிக்குள் புகுந்துள்ளது.
அப்போது கூலி வேலைக்காக சென்ற முருகன் என்பவரை காட்டெருமை விரட்டியுள்ளது. விரட்டிச் சென்று தாக்கியதில் முருகன் தென்னந்தோப்பு பகுதியில் உயிரிழந்தார்.மேலும் அங்கிருந்து ஓடி வந்த காட்டெருமை அருகே வாழைத்தோட்டத்திற்குள் கூலி வேலை செய்து கொண்டிருந்த பெண்களை விரட்டியுள்ளது. அதில் வேல்மணி என்ற பெண்மணியை முட்டி தூக்கி சிறிது தூரம் சென்று வீசிவிட்டு சென்றது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
பின்னர் அந்த காட்டெருமை அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் கிழக்கு வனத்துறையினர் மற்றும் காவல்துறையின் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் காயைமடைந்த பெண்மணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் காட்டெருமை வந்த பகுதியினை கண்டறிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டதா என்பது குறித்து தேடிச் சென்றுள்ளனர்.
Breaking News LIVE: திருமண நாளை முன்னிட்டு திருப்பதியில் அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் தரிசனம்
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .மேலும் இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் காட்டெருமை ஊருக்குள் வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் இதுபோன்று விலங்குகள் ஊருக்குள் வந்தால் விவசாய தொழில் செய்வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே உடனடியாக வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் வனத்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.