திருமணத்துக்கு வந்த மொய்ப் பணம்; மணமக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
திருமணத்துக்கு வந்த மொய்ப் பணம் மொத்தத்தையும், புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புதிய புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நிதியாக வழங்கிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆரம்பத்தில், விஷேச நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள், தாங்களாகவே முன் வந்து அன்பளிப்போ அல்லது பணமோ, விழா நடத்துபவருக்கு உதவும் என எண்ணி மரியாதை நிமித்தம் அளிக்கும் வழக்கம் நடை முறைக்கு வந்தது. காலப்போக்கில் வீட்டு விசேஷங்களில் மொய் பணம் செய்வது பாரம்பரிய பழக்கவழக்கமாக மாறியது.
மொய் செய்யும் போது 100, 500, ஆயிரம் என்று பணம் மட்டுமில்லாது தங்கம், பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு பரிசுப் பொருட்களையும் அன்பளிப்பாக தருவார்கள். தென் மாவட்டங்களில் சுப நிகழ்ச்சிகள் வைத்து, மொய் பணத்தை சேகரித்து தங்கள் வீட்டுக்கடன், குடும்பக் கடன் போன்றவற்றை அடைப்பார்கள். அதனால், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை போன்ற தென் மாவட்டங்களில் மொய் விருந்துப் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால், தாங்கள் மற்றவர்களுக்கு செய்த மொய் பணத்தை பெற்று வாழ்வாரத்தை மேம்படுத்திக் கொள்ள எதையாவது சுபநிகழ்ச்சிகள் உருவாக்கி நடத்துவார்கள். வெகு சிலர் மட்டுமே பரிசுப்பொருட்கள், மொய் பணம் வேண்டாம் என்று தவிர்ப்பார்கள்.
தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் திருமணத்துக்கு வந்த மொய் பணம் அனைத்தையும், மணமக்கள் மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை தன்னார்வ நிறுவனம், புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நிதியாக வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் சொக்கம்பட்டி வேல்மணி கல்யாண மண்டபத்தில் ஹரிகரன் - தேன்மொழிக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் விருந்துண்டு மொய் செய்தனர்.
பெரும்பாலும், இதுபோன்ற மொய் பணத்தை வசூல் செய்து, நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள், அந்த நிகழ்ச்சிக்கான செலவினங்களை செய்வார்கள். ஆனால், ஹரிகரனும், தேன்மொழியும் தங்கள் திருமணத்திற்காக இரு வீட்டு உறவினர்கள், நண்பர்கள் செய்த மொத்த மொய்ப் பணம் ரூ.1,91,698-ஐ மனமுவந்து சந்தோஷத்துடன் மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை தன்னார்வ நிறுவனம், புதிதாக ஆரம்பிக்க இருக்கும் புற்றுநோய் பிரிவு கட்டிடம் கட்டுவதற்கு நிதியாக வழங்கினர்.
UAN Recovery: ஊழியர்களே..! உங்க UAN நம்பர மறந்துட்டீங்களா? மீட்பது எப்படி? வழிமுறை இதோ.!
இதுகுறித்து மதுரை ஐஸ்வர்யம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் டாக்டர் பாலகுரு கூறுகையில், ‘‘எங்கள் தன்னார்வ நிறுவனத்தின் சேவைகளை கேள்விப்பட்டு விளாச்சேரியில் உள்ள நேத்திராவதி வலி நிவாரணம் மையத்தில் இறக்கும் தருவாயில் உள்ள ஆதரவற்ற நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் இந்த நிதியை அவர்கள் வழங்கியுள்ளார்கள். சிலர், எங்கள் மையத்தைப் பார்வையிட்டு, தாங்கள் சம்பாதித்த பணத்தில் இருந்து வழங்குவார்கள். இவர்கள், தங்கள் திருமணத்துக்கு வந்த மொய் பணத்தை வழங்கி, ஆதரவற்ற நோயாளிகளுக்கு உதவுவதற்கு புதிய வழியைக் காட்டியுள்ளார்கள்’’ என்றார். திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை மணமக்கள் நன்கொடையாக வழங்கியிருப்பது, பலருக்கு இதுபோன்று நற்செயல் செய்ய ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.