“உட்காரும் இடத்தை குறிவைத்து அடிக்கிறார்கள் ஐயா” - கைதானவர்கள் நீதிபதியிடம் கதறல்
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை காவல்துறையினர் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்ததாக கூறி குற்றவாளிகள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை காவல்துறையினர் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்ததாக கூறி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களை அடிக்கவில்லை, நீதிமன்ற ஜாமினில் வெளிவந்து காவல்துறையினர் மீது அவதூறு பரப்புவதாக காவல் நிலைய ஆய்வாளர் விளக்கம் அளித்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பாசித் ரகுமான் என்பவர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், கைலாசப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் கார் விற்பனை செய்த நிலையில், கார் உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய இரண்டு லட்சத்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்த காரை திண்டுக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் அடமானம் வைத்து பணம் கொடுத்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் காரின் உரிமையாளர் தங்கவேல் தனது காரை காணவில்லை என பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் பெரியகுளத்தைச் சேர்ந்த பாசித் ரகுமான் மற்றும் அவரது நண்பர்களான சின்னச்சாமி, தர்மராஜ், சங்கர் ஆகிய நான்கு நபர்களும் காரை திருடி சென்றதாக கூறி பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் கைது செய்து தலைகீழாக கட்டி தொங்கவிட்டு உட்காரும் இடத்தை குறிவைத்து லத்தியால் அடித்து துன்புறுத்தியதாகவும், நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நடந்தவற்றை தெரிவித்ததால் ஜாமினில் விடுவிக்கப்பட்ட பின் 4 நபர்களும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட ஐஐடி பிஎச்டி மாணவர் – போலீசிடம் சிக்கிய கடிதம்
இப்பிரச்சனை குறித்து பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் முத்துபிரேம்சந்திடம் கேட்டபொழுது, கார் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களையும் காவல்துறையினர் யாரும் தாக்கவில்லை எனவும், தங்கவேல் என்பவரின் காரை திருடிய நால்வரும் காரை எடுத்துச் சென்ற பொழுது தேனி, திண்டுக்கல் மாவட்ட எல்கையில் உள்ள சோதனை சாவடிகளின் சிசிடிவி காட்சிகளில் இடம் பெறாமல் இருப்பதற்காக கிராமசாலை மூலமாக சென்று திருச்சியில் காரை விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்ட பொழுது காவல்துறையினர் பிடித்து வந்ததாகவும், விசாரணைக்கு பின் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்திய பொழுது நீதிபதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால் தற்பொழுது மருத்துவமனையில் படுத்துக்கொண்டு காவல்துறையின் மீது அவதூறு பரப்பி வருவதாக ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.





















