(Source: ECI/ABP News/ABP Majha)
2.12 லட்சம் பங்குத்தொகை கொடுத்தால் மட்டுமே அரசு வீடு - அரசின் உதவியை எதிர்நோக்கும் மலைவாழ் மக்கள்
தினக் கூலியாக 75 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு வரை கூலி வேலைக்கு சென்று 2 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பங்குத்தொகை கட்டுவதில் மிகுந்த சிரமங்கள் உள்ளதாக வேதனை
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, மஞ்சளாறு அணையின் உள் மலைப் பகுதி கிராமமான ராசி மலை என்ற மலைவாழ் மக்கள் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 32 பழங்குடியினர் குடும்பங்கள் (100 பேர்) வசித்து வருகின்றனர். இவர்கள், 30 ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் செல்லும் வழியில் டம்டம்பாறை அடிவாரத்திலும், மூங்கிலடி வாரத்திலும் பாறை குகைகளில் வசித்து வந்த இவர்கள் கடந்த 2000ம் ஆண்டில் இப்பகுதியில் குடியேறினர். இவர்கள் மலைத்தேன், கிழங்கு வகைகள், மூலிகைச் செடிகள் போன்றவற்றைக் கொண்டு விற்பனை செய்து பிழைத்து வந்த இவர்களுக்கு 19 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய தேனி மாவட்ட ஆட்சியர் அதுல் ஆனந்த் மஞ்சளாறு அணையைப் பார்வையிட வந்த அவர் இவர்களின் நிலை கண்டு வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டு, G.கல்லுப்பட்டியில் ஆ.டி.யூ நிறுவனம் நடத்தி வந்த ஜேம்ஸ்கிம் டன், இவர்களின் நிலையறிந்து ஒரே இடத்தில் 28 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார்.
நாளடைவில் தொடர் பராமரிப்பு இல்லாததாலும், மலைமேல் உச்சியிலிருந்து உருண்டு வரும் பாறைகள் வீடுகள் மீது வந்து மோதியதில் பல வீடுகள் முற்றிலும் சேதமடைந்து குடியிருக்க தகுதியற்ற தாகிவிடவே, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தங்களது நிலையை கூறி தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ்விடம் மனு செய்துள்ளனர் மனுவை விசாரணை செய்த மாவட்ட ஆட்சியர் குடிசை மாற்று வாரியம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் அனைத்து வீடுகளும் இடிக்கப்பட்டது. இங்கிருந்த மலைவாழ் மக்கள் அருகில் உள்ள தனியார் பட்டா நிலத்தில் தற்காலிகமாக பழைய தார்பாய்கள் மற்றும் தென்னை ஓலைகள் மூலம் குடிசை அமைத்தும் மூங்கில் மரத்தின் அடியில் குடியிருந்து வருகின்றனர். மெத்தம் 32 வீடுகள் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி முறை கொரோனா தொற்று பரவலையும் காரணம் காட்டி அதிகாரிகள் வீடு கட்டுவதில் தாமதமாகி உள்ளது என கூறியுள்ளனர்.
மேலும் மலைப் பகுதியில் வன விலங்குகள் மத்தியிலும், மின் வசதி கூடஇல்லாமல் அவதிப்படும் இவர்களுக்கு பாதுகாப்பான வீடுகளை உடனே முறையான நடவடிக்கை எடுத்து கட்டித் தருமாறு குடியிருப்பின்றி தவிக்கும் அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர் இதனால் அவசரம், அவசியம் கருதி சம்மந்தப்பட்ட நிர்வாகம் வீடு கட்டும் பணியை துரிதப்படுத்த தற்போது இரண்டரை வருடங்களுக்குப் பிறகு 90 சதவீத பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிலையில், குடிசை மாற்று வாரியம் அதிகாரிகள் மலைவாழ் மக்கள் தங்களுடைய பங்கீடு தொகை 2.12 லட்சம் ரூபாய் ஒவ்வொரு குடும்பங்களும் கட்ட வேண்டும் அப்போதுதான் வீடு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்படும் என கூறி வருகின்றனர்.
இதனால் மலைக்கிராம மக்கள் சிதிலமடைந்த குடிசைகளிலும் மூங்கில் மர அடிவாரத்திலும் கூறைகள் அமைத்து சமைத்து உணவு உண்டு பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே தமிழக அரசு இலவசமாக வழங்கும் வீட்டை இந்த மலை கிராம மக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கிட வேண்டும் தினக் கூலியாக 75 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு வரை கூலி வேலைக்கு சென்று 2 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் பங்குத்தொகை கட்டுவதில் மிகுந்த சிரமங்கள் உள்ளதால் தமிழக அரசும் தேனி மாவட்ட நிர்வாகமும் எங்களின் நிலையை உணர்ந்து இலவசமாக வீடுகள் வழங்கிட வேண்டும் என்று கண்ணீர் மல்க தங்களது வேதனையை கோரிக்கையாக வைத்துள்ளனர் ராசி மலைக் மலைவாழ் கிராம மக்கள்.
மேலும் கடந்த இரண்டரை வருடங்களாக வீடு கட்டி தருவார்கள் என கூறி பல்வேறு இன்னல்களையும் மழையிலும், வெயிலிலும் இயற்கைச் சீற்றத்தில் பாதுகாப்பின்றி பல்வேறு சிரமங்களுக்கிடையே வாழ்ந்த இந்த பகுதி மலைவாழ் மக்கள் பல்வேறு கனவுகளுடன் வீடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் கஷ்டங்களைத் துச்சமென எண்ணி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது வீடு கிடைப்பதில் பல்வேறு இடர்பாடுகள் இடையூறுகள் உள்ளது. எனவே சமூக நலத்துறை இடம் வீட்டு வசதி வாரிய துறை உதவி கேட்டு மலை கிராம மக்களின் பங்கீட்டு தொகையை அரசே வழங்கி இலவசமாக வீடுவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் ஏழை மலைக்கிராம மலைவாழ் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பிறக்கும் அரசு வழங்கும் இலவச வீட்டு பெறுவதற்காக ஆவலுடன் காத்திருக்கும் இந்த மக்களுக்கு அரசு இலவசமாக வீடு வழங்குமா பொறுத்திருந்து பார்ப்போம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்