பிளாக் அண்ட் ஒயிட் கேமரா முதல் நவீன டெக்னாலஜி கேமரா வரை சேகரிக்கும் புகைப்பட மனிதன்...!
ஆரம்பகால கட்ட கேமராக்கள் முதல் தற்போது நவீன டெக்னாலஜிகள் அடங்கிய அனைத்து வகை கேமராக்களையும் சேகரித்து வருகிறார் தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சின்னதுரை
காலத்தை நிறுத்தி வைக்கும் திறன் புகைப்படங்களுக்கு மட்டுமே உண்டு. புகைப்படங்களை எடுக்கும் கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. அரிய புகைப்படங்களை தேடி தேடி சேகரிக்கும் நபர்களை நாம் பார்த்திருப்போம் ஆனால் சற்று வித்தியாசமாக அரிய கேமராக்களை தேடி தேடி சேகரிக்கும் நபராக உள்ளார் தேனியை சேர்ந்த சின்னதுரை.
போட்டோ என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதியான பிரியம் உண்டு. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று எத்தனையோ விதமான கேமராக்களுக்கும், செல்போன்களில் செல்ஃபிகளும் நம்மை ஆட்கொண்டிருந்தாலும், பள்ளி காலங்களில் பஸ் பாஸ், தேர்வு ஹால்டிக்கெட், நண்பர்களுடனான பிளாக் அன் ஒயிட் குழு புகைப்படங்கள் இன்றும் நம் வீட்டு அலமாரியை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. மனிதனின் மூன்றாவது கண்ணாக இருந்து நம் உணர்வுகளை, நிழலாக வடிக்கும் புகைப்படங்களை எடுக்கும் கலைஞர்களை சிறப்பிக்கும் நாளாகவே ஆகஸ்ட் 19 ஆம் தேதியை உலக புகைப்பட தினமாக கொண்டாடுகிறோம். இன்றைய புகைப்பட தினத்தில், ஒரு புகைப்படக் கலைஞரை பற்றிய சிறப்பு தொகுப்பை இங்கு காணலாம்.
பொதுவாக புகைப்படம் எடுக்க கேமராக்கள் அவசியம். புகைப்படக் கலைஞர்கள் அவர்களுக்கு தேவையான சில கேமராக்களை வாங்கி வைத்துக் கொண்டு அதனில் புகைப்படம் எடுத்து ரசிப்பர். புகைப்படக் கலைஞர்கள் எடுக்கும் புகைப்படத்தின் மீது பெரும்பாலானோருக்கு ஆர்வம் ஏற்படும். ஆனால் இங்கு புகைப்படம் எடுக்கும் கேமரா மீது இருக்கும் ஆர்வத்தில் மிதிக்கிறார் தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வரும் சின்னத்துரை. பல நூற்றாண்டு கால பழமையான கேமரா முதல் இன்று நடப்பில் பயன்படுத்தும் கேமிரா வரை அனைத்தையும் சேகரித்து வருகிறார் இவர்.
இவருக்கு சிறு வயதிலிருந்தே கேமரா மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் கேமரா ஸ்டூடியோ ஒன்றை கம்பத்தில் நடத்தி வர தொடங்கினார். இவர் எப்போதும் கருப்பு சட்டை வெள்ளை வேஷ்டி அணிவது வழக்கமாக வைத்துள்ளார். காரணம் பெரியாரின் மேற்கொண்ட பற்று என்கிறார் சின்னதுரை. இவர் அந்த கால எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்பட பல சினிமா பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் சினிமா துறையில் நன்கு படம் எடுக்கும் வல்லமை கொண்டுள்ளதால், சில பிரபல ஸ்டுடியோகளுக்கு அறிமுகமானவர். இவருக்கு கேமரா மீது ஆர்வம் கூடிக்கொண்டே போனதால் ஆதி காலத்தில் பயன்படுத்திய கேமரா முதல் சேகரிக்கத் தொடங்கி உள்ளார்.
இதுவரை இவரிடம் நூற்றுக்கணக்கான பழைய கால கேமராக்கள் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய கேமராக்கள் பலவற்றை சேகரித்து வைத்துள்ளார் இவர். இருந்தபோதிலும் இவருக்கு இன்னமும் கேமரா மீது உள்ள ஆர்வம் போதவில்லை. இன்றளவும் யாராவது பழையகால கேமிரா வைத்து இருந்தால் இவர் அதனை வாங்கிக் கொள்கிறார். தனது கடைசி காலம் வரை கேமரா சேகரிப்பில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்கிறார் போட்டோ பிரியர் சின்னதுரை.
World Photography Day: ‛காஸ்ட்லி’ போட்டோகிராபர் அஜித் குமார்... காதல் மன்னனின் கேமரா காதல்!