ஆன்மிகம்: கம்பம் கெளமாரியம்மன் கோயில் திருவிழா; அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு
தேனி மாவட்டம், கம்பம் கெளமாரியம்மன் கோவில் உள்ளூர் திருவிழா தொடங்கிய நிலையில் அக்னி சட்டி , ஆயிரங்கண்பானை எடுத்தும் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
எத்தனை நவீன காலங்களும், கால சூழ்நிலைகளும் மாறினாலும் இன்னும் பழமை மாறாமல் இருப்பது நிறைய நிகழ்வுகளிலும் நிகழ்ச்சிகளிலும் நாம் பார்க்க முடியும். அப்படி இருக்கும் நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனித்துவமும் சிறப்பும் இருக்கும்.
அது இடத்திற்கு ஏற்றார்போல் உருவெடுக்கும். எத்தனையோ திருவிழாக்கள், பண்டிகைகள் வந்தாலும் சரி உள்ளூர் கோவில் திருவிழாக்கள் என்றாலே ஒரு கெத்துதான். தப்படிச்சு அது முன்னால ஆடிப்பாடி கோவில் திருவிழாக்கள்ள கொண்டாடுவது கூம்பு வடிவ குழாய் மூலம் பழைய சாமி பாடல்கள போட்டு மஞ்ச தண்ணி ஊத்தி விளையாடும் மஞ்சள் நீராட்டு விழா என இப்படி உள்ளூர் கோவில் திருவிழாக்களுக்கு எப்பவுமே ஒரு தனி கெத்து இருக்குனு சொல்லுவாங்க.
ஒவ்வொரு ஊர்லயும் சித்திரை மாதங்களில் உள்ளூர் கோவில் திருவிழாக்கள் கொண்டாடுவது வழக்கம். அப்படி எத்தனையோ மாவட்டங்கள்ள உள்ளூர் திருவிழாக்கள் கொண்டாடுனாலும், தென் மாவட்டங்கள்ள கொண்டாடப்படும் கோவில் திருவிழாக்கள் பல்வேறு தரப்பினர்களையும் கவனத்தை ஈர்க்கும். அதுல மதுரை அழகர் கோவில் திருவிழா உட்பட பல்வேறு கோவில் திருவிழாக்கள் அடங்கும். அப்படி ஒரு பக்கம் கொண்டாடப்படும் உள்ளூர் திருவிழாவும் ஒன்றுதான் தேனி மாவட்டம் கம்பம் கெளமாரியம்மன் கோவில் திருவிழாவும்.
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ளது கெளமாரியம்மன் திருக்கோவில். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு தரப்பினர் சார்பில் மண்டகப்படி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி இரவு சர்வ அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. விழாவில் கம்பம் பார்க்தெரு, நகராட்சி தெரு, நெல்லு குத்தி புளியமரத்தெரு, நாட்டுக்கல், கஞ்சையன்குளம் நந்தனார் காலனி, ஆங்கூர்பாளையம் ரோடு, மணிநகரம், சுருளிப்பட்டி ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் மா, வேப்பிலை தோரணங்கள், அலங்கார மின்விளக்குகள் அமைத்து இருந்தனர். இதனால் கம்பம் நகர் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அக்னி சட்டி ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் பால்குடம், காவடி எடுத்தல், அலகு குத்துதல், ஆயிரம் கண் பானைகள் ஏந்தியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். பின்னர் இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி கவுமாரியம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறையினர் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்