(Source: ECI/ABP News/ABP Majha)
பழனியில் இருந்து திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவை துவக்கம்
பழனியில் இருந்து திருப்பதிக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவையை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.
தைப்பூச திருவிழா உட்பட முருகனுக்கு உகந்ததாக கொண்டாடப்படும் அனைத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறும். இதனால் இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில் ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகவும் மிகவும் பிரசித்தி பெற்றதாகவும் விளங்கும் பழனியில் இருந்து திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவை துவக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் துவக்கப்பட்டுள்ள ஆன்மீகப் பயணத் திட்டத்தை தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான தண்டபாணி நிலையத்திலிருந்து துவங்கிய முதல் பயணத்தில் பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
மேலும் வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை அன்று திருப்பதி கோவிலில் தரிசனம் செய்து அலமேலுமங்காபுரம் காலகஸ்தி ஆகிய கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை பழனி வந்தடையும் என்றும், ஆன்மீக பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளை www.ttdconline.com என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக பயணத்திற்கு கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாய் என்றும் இதில் உணவு பேருந்து மற்றும் தரிசன கட்டணம் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் தொகை கொடுத்துவிட்டு நாங்க படுற பாடு இருக்கே? - புலம்பிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
பழனியில் இருந்து புறப்பட்டு ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, ராணிப்பேட்டை, சித்தூர் மார்க்கமாக திருப்பதி செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்மீகப் பயணத் திட்ட துவக்க விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.