தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த ஊட்டி வர்க்கி: புவிசார் குறியீடு பெற்று அசத்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு வழங்கினால், ஊட்டியில் உள்ள அடுமனைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என ஊட்டி அடுமனை உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
மலை மாவட்டமாக உள்ள நீலகிரி மாவட்டம் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. சர்வதேச சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறையை அனுபவிக்கவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தவிர்க்கவும் ஏராளமானோர் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி இம்மாவட்டம் உயிர்க்கோள காப்பகங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல இம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் வனவிலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது. குறிப்பாக கூடலூர் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் புலிகள், காட்டு யானைகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இதன் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மற்றொரு அம்சமாக ஊட்டி வர்க்கி இருந்து வருகிறது. ஊட்டிக்கு வந்து செல்லும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள், அங்கு கிடைக்கும் ஒரு தின்பண்டமான ஊட்டி வர்க்கியை சுவைத்துப் பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். ஊட்டி வர்க்கி என்பது நீலகிரி மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வர்க்கியை பலர் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
ஊட்டி வர்க்கி என்பது கோதுமை மாவு, அரிசி, ரவை, தண்ணீர், நெய், சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றால் செய்யப்படும் ஒரு வகை பிஸ்கட் உணவு ஆகும். இந்த வர்க்கியை தயாரிப்பதற்கான பொருட்களை உற்பத்தியாளர்கள் உள்ளூரிலிருந்தே பெறுகிறார்கள். ஊட்டியில் உள்ள நீர் மற்றும் வானிலையின் பண்புகள் வர்க்கிக்கு தனித்துவமான சுவையை அளிக்கிறது. ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு வழங்கினால், ஊட்டியில் உள்ள அடுமனைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என ஊட்டி அடுமனை உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
புவிசார் குறியீடு
ஜியோகிராபிக் இண்டிகேஷன் எனப்படும் புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது நாட்டிலோ தயாரிக்கப்படும் பொருட்களுக்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு குறியீடாகும். இந்த குறியீடு என்பது, ஒரு பொருள் பாரம்பரிய முறையாக தயாரிக்கப்பட்டு, தரம் காக்கப்பட்டது என்பதற்கு சான்றாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொருட்களை தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இதனால் ஊட்டி வர்க்கிக்கும் புவிசார் குறியீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை இருந்து வந்தது.
இந்த நிலையில் ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு வழங்கியதற்கான சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த சான்றிதழை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமாராஜா, ஊட்டி வர்க்கி தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் முகமது பரூக், பயிஸ், பைசல் உள்ளிட்டோர் சந்தித்து காண்பித்து வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் புவிசார் குறியீடு பெற்றதற்காக வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். ஊட்டி வர்க்கிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு இருப்பது ஊட்டியில் உள்ள வர்க்கி தயாரிப்பாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.