“கரடி கையில் மாட்டிய தமிழகம்” - திமுகவை சாடிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
”மத்திய உள்துறை அமைச்சர் விமான நிலையம் வரும்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளது” - செல்லூர் கே.ராஜூ பேட்டி.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜூ,”மத்திய உள்துறை அமைச்சர் விமான நிலையம் வரும்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளது. திமுக எனும் கரடியிடம் தமிழகம் மாட்டிக்கொண்டது. மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் மீது திமுகவினரே அதிருப்தியில் உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றியடையும். மக்கள் எதிர்பார்க்கும் அரசு மத்தியில் ஆட்சி அமைக்கும். பாஜகவிற்கு முதன் முதலில் பல்லாக்கு தூக்கியது திமுக தான். அதேபோன்று காங்கிரஸுக்கும் பல்லாக்கு தூக்கி ஒரு லட்சத்தி 75 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டது இந்த திமுக தான்.
கூட்டணி என்பது தோளில் போட்டிருக்க துண்டுக்கு சமம். கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் மட்டுமே. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாவில் ஒருவருக்கொருவர் எதிர்த்துக்கொண்டு தமிழகத்தில் கூட்டணி அமைப்பது கொள்கை கூட்டணியா? அதிமுகவில் தான் இஸ்லாமியர் ஒருவர் அவை தலைவராக உள்ளார். அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக பணியாற்றினார் , பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்ணை அமைச்சர் ஆக்கியதும் அதிமுக தான். மேலும் இஸ்லாமியர் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கியதும், பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்தவரை குடியரசு தலைவராய் ஆக்கிய பெருமை அதிமுகவுக்கு தான் உள்ளது. அதிமுக என்பது ஒன்றுபட்டு தான் இருக்கிறது. தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் , ஓட்டுனர் பற்றாக்குறைவு உள்ளதால் பேருந்து சரி வர இயக்க முடியவில்லை. நடிகர் விஜய் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சந்திப்பது வரவேற்கக் கூடியது. தொடர்ந்து அனைத்து நடிகர்களும் பொது மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்திலிருந்து ஒருவர் கூட பங்கேற்காததற்கு உதயநிதியே காரணம், அவர் இன்னும் விளையாட்டுப் பிள்ளையாகவே உள்ளார்” என்றார். இந்த அரசாங்கத்தில் நிர்வாக கோளாறு தலை தூக்கி உள்ளதாகவும் குற்றம் சுமத்தினர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pugaar Petti: தாமதம் ஏற்படும் மேலூர் காய்கறி மார்கெட் கட்டுமானப் பணி... வியாபாரிகள், பொதுமக்கள் வேதனை !
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்