'யானை குத்திப்பட்டான், புலி குத்திப்பட்டான், தமிழர் வீரங்களை விவரிக்கும் வீரக்கற்கள்...!
புறநானூறு போன்ற இலங்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பண்டைய கால தமிழர்களின் போர் வீரங்களை போலவே, ஊரை காக்க, தன் இனத்தை பாதுகாக்க இனக்குழு தலைவனாக உருவாகும் ஒருவன். புலியோடு, யானையோடும் மோதி, அவற்றை கொன்று சாய்த்து, தானும் மரணமடையும் வீர நிகழ்வும் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ளது. அவற்றையெல்லாம் வருங்கால சந்ததி தெரிந்துகொள்ளும் வகையில், அவற்றை நடுகற்கலாக செதுக்கி வைத்திருக்கின்றனர் நம் முன்னோர். வீரத்தின் விளைநிலம் தமிழ்நாடு என்பதை இவை ஒவ்வொரு முறை கண்டறியப்படும்போது பறைச்சாற்றிக்கொண்டே இருக்கின்றன.
போரில் இறந்த வீரர்களை போற்றும் வகையில் நடுகல் நடப்படும் வழக்கம் தமிழர்களின் மரபில் இருந்துள்ளது. நடுகல் என்றாலே எதிரிலோ பக்கத்தில் உள்ள கல்லை எடுத்து வந்து நடுவது அல்ல, அதற்கு 5 விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. அந்த ஐந்து விதிகளையும் தொல்காப்பியம், காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், வாழ்த்து என்று குறிப்பிட்டுகிறது. கல் நடும் விழாவிற்கு வீரர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் வந்து மரியாதை செலுத்தும்பழக்கம் நம் நாட்டில் மட்டுமல்ல வேறு சில நாடுகளிலும் இருந்துள்ளது என்றும் குறிப்பிடப்படுகிறது.
பல்வேறு சான்றுகளில் தமிழகத்தில் வீரர்களுக்கு நடுகல் நடும்பழக்கத்தை சங்ககாலப் பாடல்கள் வழியாக அறிய முடிகிறது, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து கோம்பைசெல்லும் சாலையில் சிக்கிச்சிஅம்மன் கோயில் அருகே கிபி 15, 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ’யானை குத்திப்பட்டான்’ என அழைக்கப்படும் வீரக்கல் உள்ளது மலையும் மலை சார்ந்த இடமுமாகவும் விவசாய நிலங்களாகவும் கோம்பை அமைந்துள்ளது.
இங்கு காட்டு யானைகளிடமிருந்து விளைநிலங்கள், கால்நடைகள், மனிதர்களை பாதுகாக்கும் வகையில், வீரன் ஒருவன் யானையுடன் போரிட்டுக் அதனை கொன்று தானும் மரணமடைந்துள்ளார். அவரின் வீரமரணத்தை போற்றும் வகையில் மூன்று அடி உயரத்தில் வீரன் யானையுடன் போர் செய்யும் சண்டைக்காட்சியை புடைப்புச் சிற்பமாக வடிவமைத்து கல் நட்டு வழிபட்டு வருகின்றனர்.
இந்த வீரன் தனது இரு கைகளினால் பற்றியுள்ள நீண்ட வாளால் யானையின் கழுத்துப் பகுதியில் குத்துவது போன்ற காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குத்துப்பட்டதால் வலி தாங்க முடியாத யானை தனது வாலையும் தும்பிக்கையும் மேலே உயர்த்தி பிளிறுவது போலவும் அந்த சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வீரனுக்கு மேல் பகுதியில் பிறை நிலவும் சூரியனும் வைக்கப்பட்டுள்ளதில் இருந்து இவன் வீரமரணம் அடைந்துள்ளான் என்பதை தெரியவைக்கும் வைகையில் இந்த புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. யானையின் உருவத்தை விட வீரனின் உருவம் பெரிதாக உள்ளதால் வீரன் யானையைக் கொண்டு உள்ளார் என்பதை காட்டுகிறது.
அதேபோல், சின்னமனூர் அருகே புலிகுத்தி எனும் கிராமத்தில் கிபி பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த புலி குத்தி பட்டான் என்ற வீர கல் ஒன்றும் உள்ளது. மலையும் மலை சார்ந்த இடமாக உள்ளதால் இப்பகுதியில் காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருந்த நிலையில் இப்பகுதி மக்கள் ஆடு மாடுகளை மேய்ப்பதை தங்களது பிரதான தொழிலாக கொண்டு வந்துள்ளனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மலைப்பகுதியில் ஆடு மாடுகளைமேய்த்துக் கொண்டிருந்த போது, ஆடு மாடுகளை புலி ஒன்று வேட்டையாடி வந்துள்ளது. அந்த புலியால் ஏற்பட்ட உயிர் பலிகளை தடுக்க வீரன் ஒருவர் புலியுடன் சண்டையிட்டு புலியைக் கொன்று தானும் வீரமரணம் அடைந்துள்ளான்.
இதனை ஆவணப்படுத்தும் விதமாகவும், அந்த வீரனின் உயிர் தியாகத்தை வீரத்தையும் போற்றி நினைவுகூரும்படியாகவும் இந்த வீரக்கல் அமைந்துள்ளது . இதில் ஒரு கையில் வாள் ஏந்திய வீரன் உருவமும், சுற்றிலும் ஆண் பெண் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இன்னொருபுறம் லிங்கத்தின் மேல் பசு பால் சுரப்பது போன்ற சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த வீரனின் நினைவைப் போற்றும் வகையில் இந்த கிராமத்தின் பெயர் புலிகுத்தி என்றே தற்போது வரை அழைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற மலையும் மலை சார்ந்த பகுதிகளில் தமிழர்களின் சமூக பண்பாட்டு அடையாளங்களை வெளிக்காட்டும் வகையில், வீரர்களை தெய்வமாக வணங்கும் நடுகற்கள் தேனி மாவட்டத்தில் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தற்போதும் காணக்கிடைக்கின்றன. இவை காலப்போக்கில் அழிந்துப்போய்விடாமல் பாதுகாக்க தமிழக தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.