மேலும் அறிய
சிவகங்கை அருகே கிணற்றில் புதைந்த பெண் சடலமாக மீட்பு !
திருப்பத்தூர் அருகே 17 மணி நேர போராட்டத்திற்கு பின்பு விவசாய கிணற்றுக்குள் விழுந்த பெண்ணை சடலமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்.

கிணறு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சித்தப்படியை சேர்ந்தவர் ராஜூ. இவர் விறகு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி அஞ்சலை (40) சித்தபட்டி அருகே உள்ள எஸ்.செவல்பட்டியில் சோமன் ஆசிரியர் என்பவர் வயலில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்துள்ளார். வழக்கம்போல நேற்று முன்தினம் (ஞாயிறு) அதிகாலை வீட்டில் இருந்து கிளம்பி வயலுக்கு வேலைக்காக வந்துள்ளவர். வேலைக்கு சென்ற அஞ்சலை இரவு 8 மணி ஆகியும் வீட்டிற்கு வராததைக் கண்டு வேலைக்கு சென்று திரும்பிய ராஜு தனது குழந்தைகளிடம் அம்மா எங்கே கேட்டுள்ளார். அப்போது அவரது பிள்ளைகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் எஸ்.செவல்பட்டியில் உள்ள சோமன் ஆசிரியரின் வயல்வெளிக்கு தனது மூத்த மகள் ரஞ்சிதாவுடன் வந்து பார்த்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த பொழுது மோட்டார் அறையின் சுவர் இடிந்து விழுந்து கிடந்தது. அதனருகே அவர் கொண்டுவந்த மதிய சாப்பாடு கூடை மற்றும் அவர் அணிந்திருந்த செருப்பு இருந்ததை கண்டு பதறி போன அஞ்சலையின் கணவர் ராஜூ தனது கிராமத்தினரிடம் தகவல் தெரிவிக்க கிராமத்தினர் எஸ்.எஸ்.கோட்டை போலீசார் மற்றும் திருப்பத்தூர் சிங்கம்புணரி ஆகிய தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து ஞாயிற்று கிழமை (நேற்று முன்தினம்) இரவில் இருந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் இருந்த தண்ணீரை 5 மோட்டார் மூலம் வெளியேற்றினர். இப்பகுதியில் பெய்த தொடர் மழையினால் கிணற்றுக்குள் அதிகமான தண்ணீர் இருந்தது.

இதனால் மீட்பு பணி தாமதப்படுத்தபட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சத்தியகீர்த்தி கூறினார். மீட்புப் பணியின் போது இடையில் திடீரென மழை விழுந்ததால் செய்வதறியாது திகைத்த தீயணைப்பு படையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 17 மணி நேரத்திற்குப் பிறகு கிணற்றுக்குள் இறங்கி மண்ணுக்குள் சிக்கி கிடந்த பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். இந்த மீட்பு பணியின் போது தகவல் தெரிந்து மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, திருப்பத்துார் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் தாமோதரன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர். அஞ்சலையின் இந்த பரிதாப மரணத்தால் அவரது குடும்த்தினர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினர். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















