மேலும் அறிய
அரிவாளுக்கு மட்டும் நாங்க ஃபேமஸ் இல்லங்க..இதிலும் நாங்க கெத்துதாங்க..!
கால பைரவர் இரட்டை நாய் வாகனத்துடன் காணப்படுவது வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும்.

திருப்பாச்சேத்தி
Source : whats app
சேதுபதி மன்னருக்கு மாரநாட்டு கோடாங்கி வழியாக மாரநாட்டுக் கருப்பே நேரடியாக குறி சொன்ன கதை மக்களிடையே இன்றும் சிலாகித்துப் பேசப்படுகிறது.
திருப்பாச்சேத்தி
வைகை ஆற்றின் கரையில் மதுரை, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மானாமதுரைக்கும் திருப்புவனத்திற்கும் இடையில் அமைந்துள்ள அந்த அழகிய சிற்றூர்.. திருப்பாச்சேத்தி. இவ்வூர் கல்வெட்டுகளில் திருப்பாச்சோற்றி என வழங்கப்படுகிறது. சைவர்களுக்கும் சமனர்களுக்கும் அனல்வாதம், புனல்வாதம் மதுரையில் நடைபெற்ற போது, புனல்வாதத்தில் பாக்கள் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் ஆற்றில் விடப்பட்ட நிலையில், ஆற்றில் எதிர்த்துச் சென்று ஓலைகள் கரையேறிய இடம் திரு ஏடகம் என்றும், பாக்கள் கரை ஒதுங்கிய இடம் திருப்பாச்சேத்தி என்றும், அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வூரில் பல கோவில்கள் இருந்துள்ளதை பிற்காலப் பாண்டியர்கள் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. திருப்பாச்சோற்றி உடைய நாயனார் திருவேங்கட விண்ணக ஆழ்வார், அய்யனார் குளிர்காவுடையார், தந்தீஸ்வரமுடையார், பிடாரியார் போன்ற தெய்வங்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. கோயில் நிலங்களுக்கு சுந்தரபாண்டியன் காலத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்ட செய்தியும் கல்வெட்டுகளால் தெரிய வருகிறது.
மருநோக்கும் பூங்குழலி உடனாகிய திருநோக்கிய அழகிய நாதர்
இன்று மக்கள் வழிபாட்டில் உள்ள சிவன் கோவிலில் சிவனும் உமையம்மையும் இப்பெயரில் வழங்கப்படுகின்றனர். இக்கோயிலில் உள்ள துவாரபாலகர் சிலை போன்றவை மிகப் பழமையான சிலையாக காணப்பட்டாலும் கோயில் கட்டுமானம் 16-ஆம் நூற்றாண்டு அளவிலே கட்டப்பட்டுள்ளது. கோயில் வெளி சுற்றில் வெட்டப்பட்டுள்ள கல்வெட்டு ஒன்றில் 1540 ஆம் ஆண்டு குறிப்பிடப்படுகிறது.
துளசி அர்ச்சனை
பொதுவாக சிவனுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்யப்படும். ஆனால் இங்குள்ள சிவனுக்கு துளசி கொண்டும் அர்ச்சனை செய்யப்படுவது சிறப்புக்குரியது. இக்கோயிலில் தனி சன்னதியில் அமைந்துள்ள கால பைரவர் இரட்டை நாய் வாகனத்துடன் காணப்படுவது வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும்.
பெருமாள் கோயில்
மலைமண்டல விண்ணகர ஆழ்வார் என்னும் பெயரில் பெருமாள் அழைக்கப்படுகிறார். விக்ரம பாண்டியன் காலத்தில் கன்னட பிராமனர் ஒருவர் வழிபாட்டுக்காக இக்கோயிலுக்கு நிலக் கொடை அளித்துள்ளார். இவ்வூரில் கி.பி 13 ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியன் காலத்தில் 40 அந்தனர் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிபி 16ஆம் நூற்றாண்டில் இவ்வூர் விஜயநகர மன்னர் பெயரில் சதாசிவ தேவராயபுரம் என மாற்றம் பெற்றுள்ளது. இராமராஜ விட்டல தேவ மகாராஜா சர்வேஸ்வர குருக்கள் என்ற சைவ சமய குருவுக்கு இவ்வூர் தானமாக அளிக்கப்பட்டுள்ளது. அவரிடம் இவ்வழியே இராமேஸ்வரம் செல்பவர்களுக்கு எவ்விதமான வரியும் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
திருமால் சிற்பத் தொகுதிகள்
எட்டாம் நூற்றாண்டு திருமால் சிற்பம் கானூர் கண்மாய்ப் பகுதிகள் கிடைக்கப்பெற்று சிவன் கோயிலின் பின்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பாச்சேத்தி தெப்பக்குளம் பகுதியிலும் இடுப்புக்கு மேற்பகுதி மட்டும் கரங்கள் இழந்த நிலையில் திருமால் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இது 12,13ஆம் நூற்றாண்டு பிற்கால சிற்பமாகும்.
வட்டெழுத்துக் கல்வெட்டுகள்
இவ்வூரில் அய்யனார் கோயில் கட்டுமானத்தில் எட்டாம் நூற்றாண்டு வட்ட எழுத்துக்கல்வெட்டு ஒன்று வைத்து கட்டப்பட்டுள்ளதாக பதிவுகளின் வழி தெரிய வருகிறது, மேலும் இவ்வூர் கண்மாய்ப்பகுதியில் வட்டெழுத்துத் துண்டுக் கல்வெட்டு ஒன்று மக்களின் வழிபாட்டில் உள்ளது.
கீழடியோடு தொடர்புடைய பழமையான ஊர்
திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய்ப் பகுதியில் அதிகமான ஓடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு உறை கிணறும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கீழடியோடும் கீழடி மக்களோடும் தொடர்புடைய ஊராக இவ்வூர் இருந்திருக்கலாம். இங்குள்ள சிவன் கோயிலுக்கு 18-ம் நூற்றாண்டில் மருது சகோதரர்களால் இரண்டு மரகத லிங்கங்கள் வழங்கப்பட்டதோடு அம்மன் சன்னிதியும் கட்டவிக்கப்பட்டுள்ளது.
திரிசூல எல்லைக் கற்கள்
இவ்வூரில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் திரிசூலக்கற்கள் காணப்படுகின்றன அவை பிடாரியாகவும் முனியாண்டியாகவும் மக்களால் வணங்கப்படுகின்றன.
மாரநாட்டுக் கருப்பு
திருப்பாச்சி அருகில் உள்ள மாரநாட்டுக் கருப்பு மக்களின் துடியான தெய்வங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சேதுபதி மன்னருக்கு மாரநாட்டு கோடாங்கி வழியாக மாரநாட்டுக் கருப்பே நேரடியாக குறி சொன்ன கதை மக்களிடையே இன்றும் சிலாகித்துப் பேசப்படுகிறது.
மழவராயனேந்தல்
திருப்பாச்சேத்தியோடு ஒட்டிய பகுதியாக மழவராயனேந்தலும் அமைந்துள்ளது. இவ் ஊரில் சுப்பிரமணிய ஐயர் என்ற புகழ்மிக்க இசை மேதை வாழ்ந்து மறைந்துள்ளார், மேலும் தொல்காப்பியத்தை முதன் முதலில் நச்சினார்க்கினியர் உரையுடன் 1847ல் பதிப்பித்த மகாலிங்கையரும் இவ்வூரைச் சார்ந்தவரே ஆவார். பழம் பெருமை சூழ்ந்த இவ்வூர் அரிவாள் தயாரிப்பிலும் சிறந்து விளங்குகிறது” என்று சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா விளக்கினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பட்ஜெட் 2025
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion