மேலும் அறிய
Advertisement
குடிதண்ணி இல்லாத ஊருக்கு பொண்ணு குடுக்க மாட்டோம்னு சொல்றாங்க - சிவகங்கை கிராம அவலம்
தண்ணீர் குடிப்பதற்கே இந்தப்பாடு படவேண்டியுள்ள சூழலில், குளிப்பது என்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. - கிராம மக்கள் வேதனை.
வறட்சியான கிராமம்
சிவகங்கை நகர் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, நாட்டாகுடி எனும் சிறிய கிராமம். மாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் பல வருடங்களாக தண்ணீர் பிரச்னை தலைவிரித்து ஆடுவதாக சொல்லப்படுகிறது. இதனால் கிராமத்தில் வசித்த 70% குடும்பத்தினர் ஊரைவிட்டு காலி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது கோடைகாலத்தில் உப்பாற்றில் கிடைத்த ஊத்து தண்ணீர் குறைந்துவிட்டதாக கண்ணீர் வடிக்கின்றனர்.
கிணறு தோண்டினாலும் உப்பு நீர்தான்
இதுகுறித்து நாட்டாகுடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜன் கூறுகையில், "நாங்கள் நான்கு தலைமுறைக்கு மேல் இப்பகுதியில் தான் வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊர் முழுக்க உப்பு நீர் மட்டும் தான் கிடைக்கும். இதைத் தாண்டி தான் தொடர்ந்து விவசாயம் செய்துவருகிறோம். ஆனாலும் வறட்சியின் காரணமாக எங்கள் கிராமத்தில் வசித்த ஏராளமான மக்கள் சிவகங்கைக்கும், மதுரைக்கும் என பல இடங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள். எங்கள் ஊருக்கு பஸ் வசதி இல்லை, முறையான குடி தண்ணீர் இல்லை, இருந்த பள்ளிக் கூடமும் இல்லாமல் போய்விட்டது. இதனால் வாழ வழியற்றுப் போன மக்கள் ஊரை விட்டு காலி செய்துவிட்டனர். எஞ்சி இருக்கும் 50க்கும் குறைவான குடும்பத்தினர் மட்டும் தான் இங்கு இருக்கிறோம். இருக்கும் ஊர் இளைஞர்களுக்கு பொண்ணு கிடைக்கவில்லை. தண்ணீர் இல்லாத ஊரில் பொண்ணு எப்படி கட்டிக் கொடுப்பது என்று கேட்கின்றனர். அதையும் தாண்டி திருமணமாகி வரும் பெண்கள் சில மாதங்களில் விவாகரத்து கேட்பது அல்லது வேறு ஊர்களுக்கு குடி பெயர்வது போன்ற நிபந்தனைகளை விதிக்கப்படுகிறது.
நீர் தேவைக்கு ஆற்றுப்படுகையில் குழி தோண்டி அதில் ஊறிவரும் நீரை தான் எடுத்து பயன்படுத்துகிறோம். இரண்டு மணி நேரம் காத்திருந்தால் தான் ஒரு குடம் தண்ணீர் கிடைக்கிறது. இப்படிக் கிடைக்கும் சொற்பமான ஊற்று நீரையே அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். குடிப்பதற்கே இந்தப்பாடு படவேண்டியுள்ள சூழலில், குளிப்பது என்பது குதிரைக்கொம்பாகவே இருக்கிறது. தற்போது ஆற்றில் பள்ளம் தோண்டி எடுக்கும் குடிநீரும் பல்வேறு காரணங்களால் மாசடைந்துவிட்டதால், குடிநீருக்கும் வழியில்லாமல் போய்விட்டது. அருகிலுள்ள கிராமத்திலிருந்து தண்ணீர் வருகிறது. ஆனால் அந்த தண்ணீரும் தினந்தோறும் கிடைப்பதில்லை. இரண்டு நாளைக்கு ஒரு தடவை ஒரு மணி நேரம் மட்டுமே வருகிறது. தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அதுவும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. சாலை இருக்கிறது பேருந்து வசதி இல்லை. பள்ளி இருக்கிறது மாணவர்கள் இல்லை. மருத்துவ வசதிக்காக 11 கிமீ தொலைவிலுள்ள சிவகங்கைக்கு சிரமத்துடன் செல்ல வேண்டிய அவலம் நீடிக்கிறது. எங்கள் கிராமத்தை யாராவது எந்த பெரு நிறுவனமாவது தத்து எடுத்தாலாவது எங்களுக்கு விடிவு கிடைக்கும் என நம்புகிறோம். அரசும், மாவட்ட நிர்வாகமும், அரசியல்வாதிகளும் எங்கள் கிராமத்தை சற்று ஏறெடுத்துப்பார்க்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது" என்றனர்.
கூட்டுக் குடிநீர் கூட கிடைக்கவில்லை
இதுகுறித்து மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் விமலாதேவி மணிமுத்து தரப்பில் பேசினோம்," நாட்டாகுடியில் பலரும் நகரத்தை நோக்கி செல்வது அடிப்படை வசதியின்மை காரணமாக இல்லை. அவர்களது சொந்த தேவைக்காக வெளியூர் செல்கின்றனர். நாட்டாகுடியில் பெரியளவு தண்ணீர் பிரச்னை என்பது இல்லை. கூட்டுக் குடிநீர் தண்ணீர் கிடைக்கவில்லை என்று தான் சொல்கின்றனர். விரைவில் ஆர்.ஓ., வாட்டர் மிஷின் சரி செய்து தரப்படும். ஏற்கனவே மாத்தூரில் இருந்து தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion