"வடிவேலு இல்லாத குறையை முதல்வரும், அமைச்சர்களும் போக்கி வருகின்றனர்" - செல்லூர் கே.ராஜூ பேச்சு..
”நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என ஜோக் செய்து வடிவேலு இல்லாத குறையை முதல்வரும், அமைச்சர்களும் போக்கி வருகின்றனர்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலகலப்பேட்டி.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் கே.ராஜூ.. "சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழில் செய்பவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளனர். வேறு தொழில் செய்யலாமா இல்லை தொழிலை கைவிடலாமா என்ற நிலைக்குச் சென்றுள்ளனர்.
மின் கட்டண உயர்வு குறித்த கருத்து கேட்புக்கூட்டம் ஏன் வைத்தனர். மக்கள் ஆதரிக்காத போதும் மின்கட்டண உயர்வு நேற்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது பிறகேதற்கு கருத்து கேட்பு கூட்டம் நடத்தினீர்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் மீது மேலும் சுமையை இந்த அரசு ஏற்றி உள்ளது. மக்கள் மீது மாதா மாதம் வரி சுமத்துவதுதான் திராவிட மாடலா?
தி.மு.க., பொறுப்பேற்றதிலிருந்து தமிழகத்தில் உள்ள எந்த குடும்பமும் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் குடும்பம், அமைச்சர்கள் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியில் உள்ளனர்.
இ.பி.எஸ் தற்காலிக பதவி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்.,
தற்போதைய முதல்வரின் தந்தை முன்னாள் முதல்வராக இருந்தவர், கட்சித் தலைவராக இருந்தவர், ஆனால் எடப்பாடி பழனிச்சாமி உழைப்பால் வந்தவர், படிப்படியாக உழைத்து முதல்வரானவர், அப்பாவிற்கு பின் வந்தவர் இல்லை. தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளராகவும், வருங்காலத்தில் பொதுச் செயலாளராக ஆகவும் உள்ளார். முதல்வரே உங்களின் இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள், அவர் தகுதி படைத்தவரா இல்லையா என சொல்லுங்கள். பொய் வாக்குறுதி கொடுத்து நிறைவேற்றாததால் தமிழக மக்கள் முதல்வர் மீது மட்டுமல்ல அல்ல அவரின் குடும்பம் மீது கோபத்தில் இருக்கின்றனர். தமிழகத்தின் 50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சியில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இயக்கம், 100 ஆண்டுகள் கடந்தும் இயக்கம் இருக்க வேண்டுமென ஜெயலலிதா சூளுரைத்தார், அதை எடப்பாடிப் பழனிசாமி செய்து முடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் அதிமுக தலைமையில் ஆட்சி தமிழகத்தில் அமையும்.
ஓ.பி.எஸ் உண்மை சுற்றுப்பயணம் குறித்த கேள்விக்கு கேட்க கோபமடைந்த செல்லூர் ராஜூ
தேவையில்லாமல் கேட்கிறீர்கள், சும்மா திரும்பப்திரும்ப அதே கேள்வியே கேட்பீர்களா?? அ.தி.மு.க., பற்றி கேட்பீர்கள் என்றால் பேட்டியே நான் கொடுக்கத் தேவையில்லை தலைவர்களே கொடுப்பார்கள்.
பின் ராகுல் காந்தி குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்ப குஷியான செல்லூர் ராஜூ
”இப்படிக் கேள்வி கேளுங்கப்பா” என கூறினார்.
ராகுல் காந்தி ஓர் இளம் தலைவர் அவரின் அரசியல் பயணத்தில் தேச ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக அமையுமா எனத் தெரியவில்லை. ராகுல் காந்திக்கு நல்லபடியாக அமையும்.
முதல்வர் நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என கூறுகிறார், என்ற கேள்விக்கு
முதல்வர் ஜோக் செய்கிறார். அதற்கு சிரிக்கத்தான் செய்ய வேண்டும். நிமிடத்திற்கு நிமிடம் போட்டோக்கு போஸ் குடுக்கிறார் டி.வியில் வருகிறார். நிமிடத்திற்கு நிமிடம் உழைக்கிறேன் என்கிறார் வடிவேலு இல்லாத குறையை தமிழக அமைச்சர்களும், முதல்வரும் போக்குகிறார்கள் என்றார்.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்த கேள்வி.
ஒர் நல்ல திட்டத்தை நிறுத்திவிட்டு மாணவிகளுக்கு ஆயிரம் என கொடுக்கிறார்கள், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் திட்டத்தை அனைத்து குடும்ப அட்டைக்கும் தேர்தல் அறிவித்தபடி வழங்க வேண்டும் என கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்த கேள்விக்கு
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் முயற்சி செய்கிறார் நாங்கள் நம்புகிறோம். நாங்கள் ஆட்சியில் இருந்தால் நிதியை வாங்கி எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்கி இருப்போம். கடந்த ஆண்டை விட நீட் தேர்வு தேர்ச்சியில் தமிழகம் பின் தங்கி உள்ளது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை ஊட்டி குழப்பத்தை ஏற்படுத்தியதால் தேர்ச்சி விகிதம் குறைந்தது. நீட் தேர்வு வருவதற்கு முழு காரணம் திமுக தான். திட்டத்தை நிறைவேற்ற கருவூலத்தில் பணமில்லை என முதல்வர் கூறுகிறார். எதிர்கட்சித் தலைவராக இருந்த முதல்வருக்கு கஜானாவில் பணம் இருக்கிறதா இல்லையா என தெரியாமலா இருக்கும். மதுவிலக்கு இல்லாத மாநிலமாக மாற்றுவேன் என உறுதி கொடுத்தார் ஆனால் நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்வர் கூறியுள்ளார். திமுகவின் வெற்றிக்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மிக முக்கியக் காரணம் பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படி என கூறினார்.
முதலில் மக்களுக்கு அல்வா கொடுத்த முதல்வர், தற்போது அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டார். பார்ப்போம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறார்களா என, அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது” என கூறினார்.