சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
சம்பவத்தின்போது காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்திய தூத்துக்குடி நீதிபதி சாட்சியம் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையானது நேற்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை மத்திய சிறையில் உள்ள முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜராகினர்.
இதனையடுத்து வழக்கின் சாட்சிய விசாரணையின்போது, இந்த வழக்கு தொடர்பாக, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த, பெண் காவலர் ரேவதியிடம் சம்பவம் நடைபெற்ற போது வாக்குமூலம் பெற்ற தூத்துக்குடி நீதிபதி சக்திவேல்மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதனையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் ஜூலை -29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு
அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில், திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 9 மருத்துவ கல்லூரிகளில் ஜூலை 18,19,20 ஆகிய 3 நாட்களில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனைகளின் வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அரசு மருத்துவமனைகளில் பிரேத பரிசோதனைகள் நடக்கின்றன. தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் தான் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் மதுரை, செங்கல்பட்டு, சென்னை ஆகிய 3 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே தடயவியல் நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாமல் துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்களே பிரேத பரிசோதனை செய்கின்றனர். ஆனால், மருத்துவர் முன்னிலையில் நடந்ததாக அறிக்கையளிக்கின்றனர். ஆகவே, பிரேத பரிசோதனை அறைகளில் வீடியோ பதிவு செய்ய வேண்டுமென கடந்த 2008ல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார் .
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரேத பரிசோதனைகள் வீடியோ பதிவு செய்ய வேண்டும். பிணவறை மற்றும் பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சிசிடிவி காமிரா பொருத்தி கண்காணிக்க வேண்டும். அவை எல்லா நேரமும் இயங்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் நீதிமன்றம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு, மதுரை திருநெல்வேலி சிவகங்கை ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் பிரேத பரிசோதனையின் வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் ஜூலை 4,5,6 ஆகிய தேதிகளின் வீடியோ பதிவை சமர்ப்பிக்க அறிவுறுத்திய நிலையில், 8,9,10 தேதிகளில் நடைபெற்ற வீடியோ பதிவு சமர்ப்பிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள், மருத்துவக் கல்லூரி பிரேத பரிசோதனை நிலையங்களில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட 9 மருத்துவ கல்லூரிகளில் ஜூலை 18,19,20 ஆகிய நாட்களில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனைகளின் வீடியோ பதிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்