(Source: ECI/ABP News/ABP Majha)
தேனி: அணை பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளம் - நீரில் சிக்கிய 4 சிறுவர்கள் மீட்பு
கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் அங்கு பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை
தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைபிள்ளையார் தடுப்பணை நிரம்பி, அருவி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆபத்தை உணராமல், தடுப்பணை தண்ணீரில் போடி பகுதியை சேர்ந்தவர்கள் குளித்து வருகின்றனர். இந்தநிலையில் போடி திருமலாபுரத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர்களான பாபு (14) கண்ணன் (14), கவுதம் (14), ரவின் (14) ஆகியோர் அணை பிள்ளையார் தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் ஆனந்தமாய் குளித்தனர்.
அப்போது கொட்டக்குடி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தடுப்பணையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வெளியேறியது. அதில் 4 மாணவர்களும் சிக்கி கொண்டனர். அவர்களால், அங்கிருந்து வெளியேறி கரைக்கு வர முடியாமல் தவித்தனர். உயிருக்கு பயந்த மாணவர்கள், ஆற்றின் மையப்பகுதியில் உள்ள கட்டிடத்தின் மீது ஏறி நின்று அலறினர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். பின்னர் ஏணி மற்றும் கயிறு கட்டி 4 மாணவர்களையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான போலீசாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கொட்டக்குடி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் அங்கு பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதேபோல் போடிமெட்டு மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, போடிமெட்டு மலைப்பாதையில் 7-வது கொண்டை ஊசி வளைவு அருகே பிஸ்கட் பாறை என்னும் இடத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து ்பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 10 மணி நேரம் போராடி பாறைகள் மற்றும் மண்குவியலை அகற்றினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது.
மலைப்பாதையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் அருவி போல் கொட்டியது. இந்தநிலையில் நேற்று மாலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் போடிமெட்டு மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே தமிழக-கேரள எல்லைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் போடிமெட்டு, குரங்கணி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன், குரங்கணி மலைப்பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கனமழை பெய்து வருவதால் மலைக்கிராம மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் நீர்நிலைகள் அருகே யாரும் செல்லக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.