Pongal 2023: ஆங்கிலேய பொறியாளரை கொண்டாடும் பொங்கல் விழா.. ”பென்னிக்விக் பொங்கல் ” ஏன் தெரியுமா?
தை 1-ம் தேதி எங்களுக்கு பொங்கல் பண்டிகை இல்ல. முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுய்க் பிறந்த நாள்தான் எங்களுக்கு பொங்கல் பண்டிகை என பெருமிதத்தோடு கூறுகின்றனர் தேனி மாவட்ட மக்கள்.
ஆடி மாதத்தில் நெல் வயல்களில் விதைத்த நெல் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து நிலம் , நீர் , காற்று , ஆகாயம் , நெறுப்பு என பஞ்ச பூதங்களுக்கும் நன்றி சொல்லி நெல் அறுவடை செய்யும் முதல் மாதம் தை மாதம் ஆகும், அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் அரிசியை சர்க்கரை, பால், நெய் ,சேர்த்து புது பானையில் புத்தாடை உடுத்தி பஞ்சபூதங்களுக்கு நன்றி கூறி விவசாயிகளால் மரியாதை செலுத்தி கொண்டாடப்படும் விழாவானது தான் பொங்கல் திருவிழா. இது பெரும்பாலும் தமிழர்களின் பாரம்பரிய விழாவாகவே இருந்து வருகிறது.
நீர்வளம் கொண்ட இடங்களில் மூன்று போக நெல் விவசாய சாகுபடி நடக்கும். நீர் வளங்கல் குறைந்த இடங்களில் மழைநீர் தேக்கத்தால் ஒரு போகம் மட்டுமே நெல் விவசாயம் செய்ய முடியும். மார்கழி அல்லது தை மாத அறுவடையை நாடெங்கும் நிகழும் ஒரு நிகழ்வாக இருப்பதால் தை 1ம் நாள் தமிழர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. அறுவடை முடிந்து அதன் மூலம் கிடைக்கப்பெற்ற அரிசியை கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு ,காய்கறிகள் போன்றவற்றை படையலாக வைக்கப்பட்டு, பொங்கல் வைத்து இந்த விழாவானது நடைபெறுகிறது.
இது வரலாறாக இருக்க சற்று மாறாக தேனி மாவட்டத்தில் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் கிடைக்கும் நீருக்கு ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையை கட்டிய ஒரு ஆங்கிலேய பொறியாளருக்கு நன்றி செலுத்தும் விதமாக வருடந்தோறும் அவரது பிறந்த நாளையே தங்கள் பொங்கல் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.
தேனி, மதுரை ,திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை கட்டியவர் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுய்க். இவரின் பிறந்த நாள் ஜனவரி 15, அன்றைய தேதியில் தேனி மாவட்டத்தில் இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் உள்ள குறிப்பாக கம்பம், சுருளிப்பட்டி, உப்புக்கோட்டை, பாலாறுபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கர்னல் ஜான் பென்னிகுய்க்கின் உருவப்படத்தை வைத்து பொதுமக்கள் பொங்கல் வைத்து அவரின் பிறந்தநாளை ஒரு பொங்கல் பண்டிகையை போல வெகு விமரிசையாக வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது 1895-க்கு முன்பு தங்கள் பகுதிகள் மிகவும் வறண்ட பகுதியாக இருந்துள்ளது. அணையை கர்னல் ஜான் பென்னிகுவிக் என்ற ஆங்கிலேய பொறியாளர் கட்டினார். கட்டுமானப் பணியின்போது, காட்டாற்று வெள்ளத்தால் அணை உடைந்ததாகவும், அதைத் தொடர்ந்து தனது சொந்தப் பணத்தில் அணையைக் கட்டி முடித்ததாகவும் கூறப்படுகிறது. பென்னிகுவிக் தன்னுடைய முயற்சியால் முல்லைப் பெரியாறு அணை கட்டியது தென் மாவட்ட மக்களை நிம்மதியடையச் செய்தது.
குறிப்பாக, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி வளமானது. இதை மறக்காத கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள், ஒவ்வொரு வருட பொங்கல் விழாவும் கர்னல் ஜான் பென்னிகுய்க் பிறந்த நாளை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுவதில் தாங்கள் பெருமை கொள்வதாக கூறுகின்றனர். இந்த வழக்கமானது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கின்றனர் தேனி மாவட்ட மக்கள்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்