Palani: உலகறியும் வகையில் பழனியில் நடைபெற உள்ள முத்தமிழ் முருகன் மாநாடு! ஏற்பாடுகள் என்ன?
தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும் உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசிக்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களின் போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நாளை ஆகஸ்ட் 24, 25 ம் தேதிகளில் நடைபெற உள்ளதாக அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு மாநாடு நாளை துவங்கவுள்ளது. இம் மாநாட்டிற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் பதிவு செய்திடும் வகையில் தனியாக வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் அறுபடை வீடுகள் மற்றும் புகழ் பெற்ற முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்கு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் என முருகப்பெருமானின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாடு அமைக்கப்படுவதோடு, சமய பெரியோர்களின் உரைகள், ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இசை, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.
Mobile Phones: பட்ஜெட் விலையில் ரூ.15,000க்குள் கிடைக்கும் ஸ்மாட்ஃபோன்கள் லிஸ்ட் இதோ!
இம்மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பாளர்களாகவும், பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்களும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாநாட்டின் நிறைவு நாளில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில் ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்களும், முருக பக்தர்களும் உலகளவில் உள்ள முத்தமிழ் அறிஞர்களும் மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். ஆகையால் இந்து அறநிலையத்துறை சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு மாநாடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது. மாநாட்டிற்கு வருகை தரும் அனைத்து பொதுமக்களும் எளிதாக வந்து செல்லும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இணையதளம் மூலம் பதிவு செய்துள்ள பங்கேற்பவர்கள் மற்றும் மாநாட்டினை காண வரும் பொதுமக்கள், மாநாடு தொடர்பான விவரங்கள், ஏதேனும் சந்தேகங்கள் உள்ளிட்ட விபரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிக்கபட்டுள்ளது. 04545-241471, 04545-241472, 04545-241473, 04545-241474, 04545-241475 மற்றும் இலவச தொடர்பு எண்(Toll free) - 1800 425 9925 ஆகிய எண்கள் வாயிலாக தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுருத்தியுள்ளது.