Palani Kumbabishekam: பழனி கோயிலில் பக்தர்கள் சிரமமின்றி சென்று வர புதிய 2 மின்இழுவை ரயில் பெட்டிகள்
பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் சார்பில் தனது செலவில் பழனி கோவிலுக்கு 2 மின்இழுவை ரயில்பெட்டிகள் வழங்கப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை முதன்மையாக உள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளன. இதில் மேற்கு கிரிவீதியில் உள்ள மின்இழுவை ரயில் நிலையத்தில் இருந்து 3 மின்இழுவை ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 8 நிமிடத்தில் மலைக்கோவிலுக்கு செல்லலாம்.
2 பெட்டிகள் கொண்ட மின்இழுவை ரெயிலில் சுமார் 35 பேர் வரை பயணம் செய்யலாம். இந்தநிலையில் பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், தனது செலவில் பழனி கோவிலுக்கு 2 மின்இழுவை ரயில்பெட்டிகள் வழங்க முடிவு செய்தார். அதன்படி 2 மின்இழுவை ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்டது. டி.வி., குளிர்சாதன வசதி என பல்வேறு அம்சங்களுடன் தயாரான இந்த ரெயில் பெட்டிகள் ராட்சத லாரியில் ஏற்றப்பட்டு பழனிக்கு கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து புதிய மின்இழுவை ரெயில் பெட்டிகள் கோவிலுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடிவாரத்தில் நடைபெற்றது. இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி முன்னிலையில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், உறுப்பினர் சுப்பிரமணியன், மணிமாறன் ஆகியோர் கோவில் இணை ஆணையர் நடராஜனிடம் வழங்கினார். இதில், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் ரயில் பெட்டியானது கிரேன் மூலம் மின்இழுவை ரயில்நிலைய பகுதியில் இறக்கி வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய மின்இழுவை ரயில் பெட்டிகளில் 6 கதவுகள் உள்ளன. தற்போதுள்ள பெட்டியை காட்டிலும் அளவில் பெரியது. இதனால் ஒரே நேரத்தில் 75 பேர் இந்த பெட்டிகளில் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த பெட்டிகள் மின்இழுவை ரயிலில் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெறும். அதைத்தொடர்ந்து அவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது என்றனர்.
இதற்கிடையே பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் வழக்கமாக நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மலைக்கோவிலில் செயல்பட்டு வந்த அன்னதானம் நேற்று முதல் அடிவாரம் குடமுழுக்கு அரங்கத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டது. அதன்படி நேற்று காலை குடமுழுக்கு அரங்கில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக அதன் அருகே உள்ள பகுதியில் சமையல் செய்யப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்