பழனி - கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டம் - வெளிநாட்டினர் ஆய்வு
பழனி - கொடைக்கானல் இடையே 12 கிலோமீட்டர் தூரத்துக்கு அமையும் இந்த ரோப்காரில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 8 ஆயிரம் பேர் பயணிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற உலக புகழ் வாய்ந்த ஆன்மிக ஸ்தலமான பழனி முருகன் கோயில் உள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் ஆகியவையும் உள்ளது. பழனியில் திருவிழா காலங்களில் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். அதேபோல் சீசன் நேரங்களில் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதும், பழனிக்கு வரும் பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்பு கொடைக்கானலுக்கு செல்வதும் வழக்கமாகி இருந்து வருகிறது.
இவ்வாறு வருகிற சுற்றுலா பயணிகள், 64 கிலோமீட்டர் தூரம் கொண்ட பழனி-கொடைக்கானல் மலைப்பாதை வழியாக பேருந்துகல் , கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்த மலைப்பாதையில் சென்று வர சுமார் 3 மணி பயணி செலவு நேரம் ஆகும். அபாயகரமான கொண்டைஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. அவ்வாறு நடைபெறும் விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்தை எளிதாக்கவும், சுற்றுலா, வணிகம் வளர்ச்சி பெறவும் பழனி-கொடைக்கானல் இடையே ரோப்கார் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு தரப்பினரும் நீண்ட மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த திட்டம் பழனி, கொடைக்கானல் பகுதி மக்களின் கனவு திட்டமாகவும் இருந்து வந்தது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த திட்டம் பற்றிய அறிவிப்பு அனைத்து அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளில் தவறாமல் இடம்பெறும். முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் குறித்து, கடந்த 2005-ம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த திட்டம் பற்றி எவ்வித அறிவிப்புகளும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 18 இடங்களில் ரோப்கார் திட்டம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதில் பழனி,கொடைக்கானல் ரோப்கார் திட்டமும் இடம் பெற்றிருந்தது. 12 கிலோமீட்டர் தூரத்துக்கு இடையே அமையும் இந்த ரோப்காரில் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 8 ஆயிரம் பேர் பயணிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஆஸ்திரிய நாட்டில் இருந்து தனியார் ரோப் நிறுவன என்ஜினீயர்கள் மார்க்ஸ் டிருஷ்டர், யார்க் ஆகியோர் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் பழனி ரோப்கார் நிலையத்தை பார்வையிட்டு அது செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்தனர். ரோப்கார் செயல்பாடு குறித்து அவர்கள் கூறும்போது, பழனி, கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தில் பழனி, கொடைக்கானலில் ரோப்கார் நிலையங்கள் அமைய உள்ள பகுதிகளை விரைவில் பார்வையிட உள்ளோம். மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசிக்க உள்ளோம் என்றனர். தமிழகத்திலேயே முதன்முறையாக ஆன்மிகம் மற்றும் சுற்றுலா நகரங்களான பழனி - கொடைக்கானல் இடையே நவீன ரோப்கார் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதிக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.