மேலும் அறிய
மறைந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ்கிற்கு மதுரையில் சிறப்பு இரங்கல் பிரார்த்தனை
போப் ஆண்டவர் பிரான்சிஸ் திருவுருவ படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தனர்.

அஞ்சலி
Source : whats app
மதுரையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய மரியன்னை பேராலயத்தில் கிறிஸ்தவர்கள், மறைந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ்காக சிறப்பு இரங்கல் பிரார்த்தனையில் ஈடுபட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
போப் பிரான்சிஸ்
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் (88) காலமானார். 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். உலகில் எங்கும் போர் இல்லாமல் அமைதி நிலவ வேண்டும் என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தவர் போப்பாண்டவர் பிரான்சிஸ். ஈஸ்டர் திங்கட்கிழமையன்று காலமான போப் ஃப்ரான்சிஸ், பக்கவாதத்தாலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மீளமுடியாத இதய செயலிழப்பு காரணமாகவும் இறந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 88 வயதான போப் ஆண்டவரின் இறப்புச் சான்றிதழில், திங்கட்கிழமை காலை இறப்பதற்கு முன்பு போப் கோமாவில் மூழ்கியதாக கூறப்பட்டுள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. ஃப்ரான்சிஸ் "பெருமூளை பக்கவாதம், கோமா, மீளமுடியாத இருதய சுற்றோட்டக் கோளாறு காரணமாக, உள்ளூர் நேரப்படி நேற்று காலை 7:35 மணிக்கு (இந்திய நேரப்படி காலை 11:05 மணிக்கு) வாட்டிகனில் உள்ள சாண்டா மார்டா இல்லத்தில் அவரது குடியிருப்பில் இறந்தார்” என்று வாட்டிகன் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி இறப்புச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் அஞ்சலி
போப்பின் மரணத்தைத் தொடர்ந்து, வாட்டிகன் நகரத்தின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஜெபமாலை பிரார்த்தனைக்காக ஏராளமானோர் திரண்டனர். மேலும் போப்பிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக உலகம் முழுவதும் பல பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ட்ரம்ப் இரங்கல் தெரிவித்ததோடு, தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. போப் இறப்பு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் அவருக்கு இரங்கல் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை
இந்நிலையில் மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள தூய மரியன்னை பேராளயத்தில் (செயின்ட் மேரி சர்ச் ) சபையின் பங்குத்தந்தை ஹென்றி ஜெரோம் தலைமையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவிற்காக சிறப்பு திருப்பலி பிரார்த்தனை மேற்கொண்டார். கிறிஸ்தவர்கள் சிறப்பு திருப்பலி பிரார்த்தனையில் ஈடுபட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தனர்.
குறிப்பாக பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள், தங்கு விடுதி மாணவர்கள் மற்றும் பங்கு மக்கள் போப் ஆண்டவர் பிரான்சிஸ் திருவுருவ படத்திற்கு முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















