Jallikattu: இதுலயுமா...? பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்...! 11 பேர் தகுதிநீக்கம்...!
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்த 11 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே அனைவரும் ஆர்வமாக எதிர்பார்ப்பது ஜல்லிக்கட்டு போட்டிகள்தான். அதுவும் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீதும் மக்களின் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே போகிறது.
பாலமேடு ஜல்லிக்கட்டு:
ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள்தான் மிகவும் பிரபலம். இந்த வகையில் நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது.
அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்த இந்த போட்டி காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதுரையில் நடப்பாண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒரு நபர் ஒரு இடத்தில் நடைபெறும் போட்டியில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆள்மாறாட்டம்:
போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு பிரத்யேக எண் அச்சிடப்பட்ட பனியன்கள் வழங்கப்பட்டு அவர்கள் களமிறங்கி வருகின்றனர். இந்த நிலையில், வீரர்களில் சிலர் தங்களது பனியன்களை மாற்றி ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை தகுதிநீக்கம் செய்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மூன்றாம் சுற்று முடிந்துள்ள வரை மொத்தம் வழங்கப்பட்டுள்ள 1000 டோக்கன்களில் 328 காளைகள் தகுதி பெற்றுள்ளவைகள் ஆகும். அவற்றில் 305 காளைகள் அவிழ்க்கப்பட்டுள்ளன. இவற்றில் 15 காளைகள் பல்வேறு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
விறுவிறுப்பு:
போட்டியில் காளைகளை அடக்க 195 வீரர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 11 வீரர்கள் காயமடைந்துள்ளனர். 4 வீரர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காளைகளை அடக்குவதற்காகவும், போட்டியில் பங்கேற்பதற்காகவும் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் காளைமாடு முட்டியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் சிவக்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Jallikattu: சீறிப்பாயும் காளைகள்.. அடக்க போராடும் காளையர்கள்.. வீரவிளையாட்டால் களைகட்டும் பாலமேடு..!