Madurai Meenakshi Amman Temple: சூரிய கிரகணத்தால் வரும் 25-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு..!
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி மூடப்படும் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மதுரையின் பல நூற்றாண்டு கால அடையாளமாகவும், மதுரையின் நடுவிலும் மிகப் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஆன்மீகம், வரலாறு, கலை, பண்பாட்டு அடையாளங்களுடன் மீனாட்சி கோயில் இன்றளவும் திகழ்கிறது.
இந்தநிலையில், உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மூடப்படும் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, "மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் 1432ம் பசலி 25.10.2022ம் தேதி ஐப்பசி மாதம் 8-ஆம் தேதி செவ்வாய் கிழமை அன்று சூரிய கிரகணம் மாலை 5.23 மணிக்கு ஆரம்பமாகி 6.23 மணிக்கு முடிவடைவதால் 25.10.2022 செவ்வாய் கிழமை அன்று காலசந்தி பூஜை காலத்தில், உச்சிகாலம், சாயரட்சை ஆகிய பூஜைகள் நடைபெற்று திருக்கோயில் நடை காலை 11.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை அம்மன் சுவாமி மூலஸ்தானத்தில் பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு நடை சாத்தப்படும். இந்த நேரத்தில் பொது மக்கள் அர்ச்சனை செய்யவோ, தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை.
25.10.2022ம் தேதி சூரிய கிரகணம் மத்திம காலத்தில் மாலை 5.51 மணிக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டு, அம்மன் / சுவாமிக்கு கிரகண கால அபிஷேகம் நடைபெறும். அதன் பின் அபிஷேகம் முடிவடைந்து அருள்மிகு சந்திரசேகரர் புறப்பாடு நடைபெறும். அதன் பின் இரவு 07.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், கோலாட்ட உற்சவம், சாமி புறப்பாடு அன்று ஒரு நாள் மட்டும் இரவு 07.00 மணிக்குப் பின் நடைபெறும்.
இதேபோன்று இத்திருக்கோயிலின் நிர்வாகத்தில் உள்ள கீழ்க்கண்ட திருக்கோயில்களிலும் இதே நேரத்தில் நடை சாத்தப்பட்டு, நடை திறக்கப்பட்டும் பூஜைகள் நடைபெறும் என்ற விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது." என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu | Meenakshi Sundaraswarar Temple in Madurai will remain closed from 11am-7pm on Tuesday, Oct 25 in view of solar eclipse. Devotees will be allowed till 11 am & after 7 pm. This applies to all sub-temples of Meenakshi Sundareswarar Temple: Temple authority
— ANI (@ANI) October 16, 2022
(File pics) pic.twitter.com/E2Wzf9Dofk
அதன்படி, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் கீழ் இயங்கும் 22 உபகோயில்களின் பட்டியல்:
- அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தெப்பக்குளம், மதுரை
- அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், தெப்பக்குளம், மதுரை
- அருள்மிகு பைரவர் திருக்கோயில், தெப்பக்குளம், மதுரை
- அருள்மிகு தேரடி கருப்பணசாமி திருக்கோயில், கீழ மாசி வீதி, மதுரை
- அருள்மிகு காஞ்சன மாலையம்மன் திருக்கோயில், எழுகடல், மதுரை
- அருள்மிகு எழுகடல் விநாயகர் திருக்கோயில், மதுரை
- அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், கீழ ஆவணிமூலவீதி, மதுரை
- அருள்மிகு தென் திருவாலவாய சுவாமி திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை
- அருள்மிகு வீரபத்ர சுவாமி திருக்கோயில், தெற்கு மாசி வீதி, மதுரை
- அருள்மிகு வடக்குவாசல் அனுமார் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை
- அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை
- அருள்மிகு செல்லத்தம்மன் திருக்கோயில், சிம்மக்கல், மதுரை
- அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருமனலராயர் படித்துறை, மதுரை
- அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், புட்டுத்தோப்பு, மதுரை
- அருள்மிகு பரிபூரண விநாயகர் திருக்கோயில், செல்லூர், மதுரை
- அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை
- அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில், நாகமலை புதுக்கோட்டை, மதுரை
- அருள்மிகு அய்யம் பொழில் ஈஸ்வரர் திருக்கோயில், ஆமூர், மதுரை
- அருள்மிகு மகாகணபதி திருக்கோயில், சுண்ணாம்பூர், மதுரை
- அருள்மிகு பிடாரியம்மன் திருக்கோயில், திருவாதவூர், மேலூர் வட்டம், மதுரை
- அருள்மிகு திருமறைநாதர் சுவாமி திருக்கோயில், திருவாதவூர், மேலூர் வட்டம், மதுரை
- அருள்மிகு தெய்வநாயகப் பெருமாள் திருக்கோயில், கொந்தகை, சிவகங்கை
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கோயில்களும் அன்றைய நாளில் நடை சாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.