Kallazhagar Festival: ’வாராரு வாராரு அழகர் வாராரு’... பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்..!
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இனிதே நடைபெற்றது.
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இனிதே நடைபெற்றது.
மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று முதல் ஒவ்வொரு நாளும் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதனைத் தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மே மூன்றாம் தேதி திரு தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்ததோடு மட்டுமல்லாமல் திருவிழாவிலும் பங்கேற்றனர்.
தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்ததால் மதுரையில் திரும்பும் பக்கம் எல்லாம் மக்கள் வெள்ளம் போல் காட்சியளித்தனர்.
தேரோட்டம் முடிந்த அன்று இரவு தேர்ச்சக்கரம் தடம் பார்க்கும் பணி நடைபெற்றது. இதன் பின்னர் சப்தாவர்ண சப்பரத்தில் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். இருவரும் ஒரே சப்பரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இந்த ஒரு நாளில் மட்டும்தான் என்பதால் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தரிசனம் செய்தனர்.
அழகர் கோவில் திருவிழா
இதற்கிடையில் மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா மே ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழும் வைபவம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் கள்ளழகர் தங்க பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய அவர் மேள, தாளம் முழங்க கண்டாங்கி பட்டுடுத்தி, நெற்றிப்பட்டை, கரங்களில் வளைதடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் சென்றார்.
நேற்று மூன்று மாவடியில் மதுரை மக்கள் கள்ளழகரை வரவேற்கும் எதிர் சேவை வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய அழகர் இரவில் தல்லாகுளம் பெருமாள் கோயிலை அடைந்தார். அவருக்கு விடிய விடிய பூஜைகள் நடைபெற்றது.
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று காலை 5.45 மணியளவில் நடைபெற்றது. இதில் பச்சை பட்டு உடுத்தி தங்க குதிரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்குதிரையில் வீரராகவப் பெருமாள் எழுந்தருளி அழகரை வரவேற்றார். சுமார் 5 லட்சம் பக்தர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
நேற்று இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றங்கரையை சூழ்ந்த நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் செய்துள்ளது. மேலும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் காரணமாக மதுரை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் விழாவுக்காக சில தினங்களுக்கு முன் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு அது மதுரை அடைந்தது மக்கள் பூத்தூவி வரவேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து இன்று ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்ச்சியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா..கோவிந்தா.. என்ற கோஷம் விண்ணதிரகள்ளழகரை மனம் குளிர்வித்து வரவேற்கும் வகையில் தோல் பைகளால் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.