மேலும் அறிய
திமுக ஆட்சியில் 7000 கொலைகள்; குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை - முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 2021 முதல் தற்போது வரை 7000 படுகொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. மக்களின் பாதுகாவலராக எடப்பாடியார் உள்ளார், குற்றவாளிகளின் பாதுகாவலராக ஸ்டாலின் உள்ளார் - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார் - எடப்பாடி பழனிசாமி
Source : whats app
2026 ஆண்டில் எடப்பாடியார் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 7000 படுகொலை
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், “திமுக ஆட்சிக்கு எப்போதெல்லாம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் மின்வெட்டு ஏற்படும். சட்ட ஒழுங்கு சீர்கெடும், விலைவாசி உயர்வு ஏற்படும். ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டில், தனது தந்தை கருணாநிதி ஆட்சியைக் காட்டிலும் அதை மிஞ்சிய வகையில் ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார். (2021 ,2026 ) வரை திமுக ஆட்சியின் ஐந்தாண்டுகள் தங்கள் வாழ்வில் மோசமான ஆண்டுகளாக தமிழக மக்களின் நினைவில் நிச்சயம் இருக்கும். ஏனென்றால் இதுவரை தமிழகத்தில் 7000 படுகொலை சம்பவங்கள் நடைபெற்று உள்ளது. இங்கும் கொலை, அங்கும் கொலை, எங்கும் கொலை என அப்பாவி மக்களின் அச்சம் மிகுந்த குரல்கள் எல்லா இடங்களும் ஒலிக்கிறது, மக்களின் பயத்தை போக்கி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய ஸ்டாலின் திமுக அரசு ஆழ்ந்து உறங்குகிறது.
அவலங்களை நாம் அடியோடு அகற்ற வேண்டும்.
திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை, தூசி அளவில் கூட காவல்துறை மீது பயமில்லை, நடக்கக்கூடிய குற்றங்களை குறைக்க வேண்டிய அரசு மறைக்கத்தான் பார்க்கிறது. எனவே, இந்த சூழ்நிலையை குற்றவாளிகள் சாதகமாக்கி கொள்வதால் குற்றச்செயல்கள் கூடிக் கொண்டே போகிறது. தனி மனிதனுக்கு பாதுகாப்பு நிலை கேள்விக்குறியாகி வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் தனி மனிதனின் வளர்ச்சி கேள்விக்குறியாகி விட்டது? இதனால் தமிழகத்தின் வளர்ச்சி அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் பல்வேறு வடிவங்களில் இளைஞர்களையும், இளம் பெண்களையும் குறி வைத்து விற்கப்படுகிறது. எதிர்காலத்தை தொலைத்து சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் கருவியாக மாணவ சமுதாயம் மாறி வருவதை மக்களாகிய நாம் உணர வேண்டும். அறிவின் அடிமையாக இருந்த இளைஞர்கள் இன்றைக்கு போதையின் அடிமையாக மாறிவிட்டது. அதனால் இந்த அவலங்களை நாம் அடியோடு அகற்ற வேண்டும்.
குழப்பம் வேண்டாம் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்
சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களின் முன்னேற்றத்திற்கு இயங்கி வரும் தாம்பரத்தில் உள்ள அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமியை அங்குள்ள காவலாளியே பாலியல் கொடுமை செய்து வேலியை பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. இந்த ஆட்சி மக்களுக்காக நடக்கிறதா? இல்லை குற்றவாளிகளுக்காக நடக்கிறதா? அண்ணா பல்கலைக்கழக மாணவி முதல் அரக்கோணம் மாணவி வரை திமுக நிர்வாகிகளால் நிகழும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. ஓய்வு பெற்ற எஸ்.ஐ. முதல் ஒன்றும் அறியாத குழந்தைகள் வரை குற்றவாளிகளால் தினமும் படுகொலைநடைபெறுகிறது. இப்படி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பற்ற முறையிலான ஆட்சியால் தமிழ்நாடே தடுமாறுகிறது. எடப்பாடியார் மக்களின் பாதுகாவலராக இருந்தார், ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் குற்றவாளிகளின் பாதுகாவலராக உள்ளார். நிச்சயம் திமுக அரசு வீட்டுக்கு போகும் எடப்பாடியார் தலைமையிலான மிகப்பெரிய கூட்டணிக்கு வெற்றியை தர மக்கள் தயாராக இருக்கிறார்கள். இதில் எந்த குழப்பம் வேண்டாம் மக்களும் தெளிவாக இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















