தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகர் நான்கு மாசி வீதிகள், விளக்குத்தூண், பத்துதூண், கீழ வாசல், காமராஜர் சாலை, பைபாஸ் சாலை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில்  பொதுமக்கள் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு குவிந்துவருகின்றனர். கடந்த 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் பொதுமக்கள் பொருட்களை வாங்க வருகை தருவதால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர். இறுதிகட்ட விற்பனையில் சாலையோர வியாபாரிகளிடம் பாய், தலையணை, விரிப்புகள், குடை, வீட்டு உபயோக பொருட்கள் குறைந்த விலையிலான ஆடைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
 
டெலஸ்கோப் வழியாக கண்காணிப்பு தீவிரம்

மேலும் தெற்குமாசி , மேலமாசி வீதிகளில்  ஆடை மற்றும் நகை விற்பனையும், கீழமாசி, வடக்குமாசி வீதிகளில் வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர். கீழவாசல், காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் சில்வர் பாத்திரங்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தீபாவளி விற்பனையை முன்னிட்டு பஜார் பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து வருவதால் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். 100 CCTV கேமிராக்கள் மூலம் பொதுமக்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு டெலஸ்கோப் மூலமாக கண்காணிப்பு செய்யப்படுகிறது.

இதமான கால சூழல் உள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பொருட்களை வாங்கிசெல்கின்றனர்

ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் காவல்துறையினர். விளக்குத்தூண் பகுதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுர அறையில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்துவருகிறார். இதமான கால சூழல் உள்ளதால் பொதுமக்கள் ஆர்வமுடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர், இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.