TVK Vijay: மக்களே.. விஜய் போட்டியிடப்போகும் தொகுதி இதுதான்... சர்வே எடுக்கும் தவெக!
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், விஜய் போட்டியிடும் தொகுதி எது? என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவாகியுள்ளது.
சூடுபிடிக்கும் அரசியல் களம்:
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கரூர் பரப்புரையில் நிகழ்ந்த துயர சம்பவம் அவரது அரசியல் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மீண்டும் தீவிர பரப்புரை, சுற்றுப்பயணத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதற்கான பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் விஜய் போட்டியிடப் போகும் தொகுதி எது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விஜய் ஆன்மீகம், ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் ஆவார். அவரது குடும்ப ஜோதிடர் அளித்த ஆலோசனையின்படியே அவர் தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். விஜய் எனும் பெயராலே அவர் வி என்ற வார்த்தை அவருக்கு மிகவும் உகந்ததாகவே கருதப்படுகிறது.
விஜய் எந்த தொகுதியில் போட்டி?
இந்த சூழலில், அவர் போட்டியிடும் தொகுதியும் வி என்ற எழுத்தில் தொடங்கும் தொகுதியாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் வி என்ற எழுத்தில் மொத்தம் 9 தொகுதிகள் மட்டுமே உள்ளது.
1. வில்லிவாக்கம்
2. விருகம்பாக்கம்
3. விக்கிரவாண்டி
4. விருதாச்சலம்
5. வீரபாண்டி
6. விராலிமலை
7.விருதுநகர்
8. விளாத்திக்குளம்
9. விளவங்கோடு
ரகசிய சர்வே:
இந்த 9 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே விஜய் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசம் என்று கூறப்படுகிறது. விஜய் வெற்றி பெற வேண்டியது மிக மிக அவசியம் என்று தமிழக வெற்றிக் கழகம் கருதுவதால் மேலே கூறிய 9 தொகுதிகளிலும் பெண்கள், இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்குகள், தவெக-வின் செல்வாக்கு, திமுக - அதிமுக செல்வாக்கு ஆகியவை குறித்து தவெக தரப்பில் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் வாக்குகள்:
பெண்கள் அதிகம் இருக்கும் தொகுதியிலே விஜய் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை அதிகம் கொண்ட நடிகர் விஜய் ஆவார். இதனால், தனது ரசிகர்களின் வாக்குகளை தனக்கு சாதகமாக மாறும் என்று விஜய் கருதுகிறார். இதனால், அந்த தொகுதியில் போட்டியிடவே விஜய் விரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், வி எழுத்தில் தொடங்கும் இந்த 9 தொகுதிகளில் மட்டும் தீவிர கவனத்தை தவெக செலுத்தி வருகிறது. அதேசமயம், கரூர் சம்பவத்திற்கு பிறகு ஒட்டுமொத்த அரசியல் களமும் மாறியுள்ள நிலையில், விஜய் தரப்பினர் தங்களது அடுத்த ஒவ்வொரு நகர்வையும் கவனத்துடன் எடுத்து வைத்து வருகின்றனர். மேலும், மற்ற தொகுதிகளிலும் கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக மற்றும் விஜய்யின் செல்வாக்கு எப்படி உள்ளது? என்பதையும் சர்வே எடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த சர்வே முடிவின் அடிப்படையில் விஜய் போட்டியிட உள்ள ஒரு தொகுதி தேர்வாக உள்ளது.
களத்தை மாறறிய கரூர் சம்பவம்:
கரூரில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அனுதாபங்கள், அந்த சம்பவத்தின் தாக்கத்தை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் காய் நகர்த்தி வருகின்றனர். இந்த சூழலில், விரைவில் விஜய்யும் தனது அரசியல் நகர்வுகளை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீபாவளி பண்டிகை நாளை கொண்டாட வேண்டாம் என்று தவெக அறிவித்துள்ளது. விஜய் தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை மற்றும் தீவிர அரசியலை மீண்டும் எப்போது தொடங்கலாம்? என்பதையும் தனது ஜோதிடருடன் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.





















