தமிழர்களின் பாரம்பரியத்தோடு கலந்த மதுரை சித்திரை திருவிழா, கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. மதுரையின் அடையாளமாக திகழும் சித்திரை திருவிழா நடைபெறாமல், மதுரைவாசிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில் கொரோனா கட்டுப்பாட்டில் வந்ததால், இந்த ஆண்டு வழக்கமான சித்திரை திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விழா தொடங்கி உள்ளது. தினமும் வீதி உலா கோலாகலமாக நடந்து வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. அதே போல் திருத்தேரோட்டம், கள்ளழகர் புறப்பாடு, கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ உள்ளன.
மீனாட்சி அம்மன்-சொக்கநாதர் திருக்கல்யாணத்தை (Meenakshi Amman Thirukalyanam) காண, எப்போதுமே போட்டா போட்டி இருக்கும். அந்த வகையில் அதில் பங்கேற்பவர்களுக்கு கட்டண முறையில் முன்பதிவு செய்ய அறிவிக்கப்பட்டு, அதற்கான இணைய வசதியும் அறிவிக்கப்பட்டது. நபர் ஒருவருக்கு ரூ.200 ரூ.500 வீதம் அதற்காக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர், சம்மந்தப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் இணையதளத்தில் அதற்காக முன்பதிவு செய்த நிலையில், சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வடக்கு ஆடி- மேல ஆடி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மேடையானது நறுமணம் மிக்க ஏழு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராகவும், மீனாட்சியம்மனின் வலதுபுறம் பவளக்கனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடப்புறத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் தனி தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளினர்.
இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்கள் வேத மந்திரங்கள் முழங்க விநாயகர் வழிபாடு செய்து பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு பாலிகை இடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை அடுத்து மீனாட்சியம்மன், சுந்தரேசுவரர், சார்பில் பிரதிநிதிகளாக இருந்த சிவாச்சாரியார்களுக்கு ரக்சாபந்தன் எனப்படும் காப்பு கட்டும் வைபவமும் நடைபெற்று அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் பட்டு சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றதை தொடர்ந்து, சுந்தரேசுவரர் சார்பிலும் மீனாட்சியம்மன் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்த சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்ற பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க மீனாட்சியம்மனுக்கு வைர கற்கள் பதித்த திருமங்கலநாண் அணிவிக்கப்பட்டு மேளதாளத்துடன் பக்திகோசம் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தேறியது. திருக்கல்யாணம் நடைபெற்றதையடுத்து சுமங்கலி பெண் தங்களுடையை மங்கலநாண்களை புதுப்பித்து அணிந்து கொண்டனர்.
இதனை அடுத்து தொடர்ந்து பல்வேறு தீப தூப ஆராதனைகள் நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்வின் போது கோயில் முழுவதிலும் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த திருக்கல்யாண நிகழ்வில் அமைச்சர் பி.மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர், இந்து அறநிலையத்துறை செயலாளர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் மற்றும் நீதிபதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் குங்குமம், மங்கல்நாண் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சர்பிலும் மதுரை மாநகராட்சி சார்பிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
திருக்கல்யாணத்தை தொடர்ந்து இன்று இரவு அம்மன் அனந்தராயர் பூப்பல்லக்கிலும், சுவாமி யானை வாகனத்திலும் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். சிம்மக்கல் சேதுபதி பள்ளியில் ஒரு லட்சம் பக்தர்களுக்கு கல்யாண விருந்து நடைபெற்றது.