ஒன்றிய அரசுடன் இணைந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நடவடிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக அரசு ஒன்றிய அரசுடன் இணைந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் மதுரை மாவட்டத்தில் ரூ.6.34 கோடி மதிப்பில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது சுகாதார ஆய்வகம் மற்றும் சுகாதார நிலைய கூடுதல் கட்டிடங்களை பயன்பாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். ஆனையூர் பகுதியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், மேயர் இந்திராணி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "மதுரை திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரி தோப்பூருக்கு மாற்றப்பட உள்ளது. தோப்பூரில் 5 ஏக்கர் பரப்பளவில் ஹோமியோபதி கல்லூரி கட்டப்படும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தின் அருகே ஹோமியோபதி கல்லூரி கட்டப்பட உள்ளது. ஓராண்டுக்குள் தோப்பூரில் ஹோமியோபதி கல்லூரி கட்டுவதற்கான பணிகள் துவங்கப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதியை விரைவில் தர வலியுறுத்தி ஜெய்க்கா நிதி நிறுவன நிர்வாகிகளை நேரில் சந்தித்தோம். 2028 ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைய வாய்ப்புகள் உள்ளதாக ஜெய்க்கா நிறுவனம் தெரிவித்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காத நிலையில் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் டோக்கியோவில் ஜெய்க்கா நிறுவனத்தை சந்தித்து வலியுறுத்தினோம்" என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. டிசம்பர் இறுதிக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் தொடங்கப்படும் என ஜெய்கா நிறுவனம் கூறியுள்ளது. 2028 க்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க வாய்ப்புள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் ஆவதில் ஜெய்க்கா நிறுவனத்திற்கு தொடர்பில்லை. தமிழக அரசின் சார்பில் ஒன்றிய அரசுடன் இணைந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பேச உள்ளோம். அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எத்தனை அடைப்புகள் இருந்தன, எது மாதிரியான சிகிச்சை எடுக்கப்பட்டது என சந்தேகம் வருபவர்கள் மருத்துவமனை சென்று தெரிந்து கொள்ளலாம், செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து சந்தேகப்பேர் வழிகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லை" என கூறினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்