மேலும் அறிய
Advertisement
மதுரை: உசிலம்பட்டி அருகே 400 ஆண்டுகள் பழமையான வளரி வீரனின் நடுகல் கண்டெடுப்பு...!
’’1801ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த ஆயுத தடை சட்டத்தின் போது ஆயிரக்கணக்கான வளரிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன’’
தென் தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த ஆயுதங்களில் ஒன்றாக போற்றப்படும் வளரி எதிரியை நிலை குலைய வைப்பதில் வல்லமை கொண்டது. இந்த ஆயுதம் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட சில இடங்களில் அதிகளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. 1801 ஆண்டு ஆயுத தடைச் சட்டத்தின் போது ஆயிரக்கணக்கான வளரிகளும் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. வளரியை வைத்திருக்கும் நபர்களுக்கு பெரும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. யாரும் இதனை கற்றுவிட கூடாது என ஆங்கிலேய ஆட்சியாளர் கங்கணம் கட்டியுள்ளனர். கணிதம் - இயற்பியல் உதவியால் வளரியை வீசி எதிரியை மிரள வைத்துள்ளனர். விசை குறையவும் கூடாது, எடை கூடவும் கூடாது. குறிப்பிட்ட எடைக்கட்டுப்பாடு, திறன் உள்ளிட்டவைகளை கணித்து வளரி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மரக்கட்டை, உலோகம், தந்தம் உள்ளிட்ட பலவற்றை பயன்படுத்தி வளரிகள் செய்யப்பட்டுள்ளன. திருமண சடங்குகளில் கூட வளரிகள் பயன்படுத்தி பெருமைகொள்ளும் அளவிற்கு வளரியின் நிலை இருந்துள்ளது. ஆங்கிலேயரின் அச்சத்தால் வளரி முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய வளரிகள் அருங்காட்சியகங்களிலும், சில கோயில்களிலும், சிலரது வீடுகளிலும் காணமுடிகிறது. இந்த நிலையில் உசிலம்பட்டி அருகே 400 ஆண்டுகள் பழமையான வளரி ஆயுததுடன் கூடிய வீரனின் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.கோட்டைப்பட்டி கிராமத்தின் அருகில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் நடுகற்கள் உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர்., இ.கோட்டைப்பட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்., அதில் கிராமத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் மரத்தடியில் வீரன் ஒருவர் தனது துணைவியாருடன் ஒரு கையில் ஈட்டி மற்றும் மற்றொரு கையில் வளரி-யுடன் 3 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட நடுகல்லை கண்டறிந்தனர். உசிலம்பட்டி பகுதியிலும் வளரி ஆயுதம் பயன்படுத்தியதற்கான சான்றாக இந்த நடுகல் சிறபம் காணப்படுவதாக தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார். மேலும் இந்த கிராமத்தில் இதே கால கட்டத்தை ஒத்த குதிரை வீரன், தனது துணைவியாருடன் உள்ள நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்ட சூழலில் ஒரே காலகட்டத்தில் பல்வேறு வகையான இனக்குழு மக்கள் இந்த பகுதியில் வாழ்த்து வந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கி கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்து போனவர்களை தியாகிகளாக போற்றிய கலாசாரம் நம்முடையது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்' என்றார், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர். இதன் பொருள் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான். அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு. இந்த நடுகல்லே நாளடைவில் குலதெய்வமாக வழிபாடுசெய்யப்படுகிறது. அதேபோன்று போரிலோ, வேறு காரணங்களினாலோ கணவன் இறந்தபின் அவனுடனோ அல்லது தனியாகவோ உடன்கட்டை ஏறி இறந்த மனைவிக்கு அமைக்கப்பட்ட சதிக்கற்களை மாலை கோவில்கள் என மதுரை, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் வணங்கி வருகிறார்கள். இந்நிலையில் உசிலம்பட்டி அருகே 400 ஆண்டுகள் பழமையான வளரி ஆயுததுடன் கூடிய வீரனின் நடுகல் கண்டறியப்பட்டுள்ளது தொல்லியல் ஆர்வலர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Kamalam Paati | 8 ரூபாய்க்கு கருப்பட்டி ஆப்பம்.. கமலம் பாட்டியின் ஓய்வறியா உழைப்பும், புன்னகையும்..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion