Kodaikanal: வார விடுமுறை... இயற்கை சூழலை அனுபவிக்க கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள்
கடும் பனி மூட்டத்தால் சுற்றுலாத்தலங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் தெரியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாந்த நிலையிலும் கூட குளுகுளு காலநிலையை அனுபவித்து வருகிறார்கள்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.
குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். இந்தநிலையில் தற்போது கொடைக்கானல் சுற்றுலா தளங்களில் கேரளா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் கடும் பனி மூட்டத்தால் மலை சாலைகள் மறைந்துள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள். கடந்த வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குறைந்து இருந்த நிலையில், தற்போது கேரளாவிலிருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து வரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலாத் தலங்களாக இருக்கக்கூடிய தூண்பாறை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கேரளா சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் கொடைக்கானலில் காலை முதல் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் சாலைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் வாகனங்களை செலுத்தி வருகிறார்கள். நேற்று மற்றும் இன்றும் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.
ஒரேநேரத்தில் கார், வேன், பேருந்து என வாகனங்கள் அணிவகுத்து வந்ததால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் மலை சாலை முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. கடும் பனி மூட்டத்தால் சுற்றுலாத்தலங்களில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் தெரியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாந்த நிலையிலும் கூட குளுகுளு காலநிலையை அனுபவித்து வருகிறார்கள்.