கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை முறை கேடாக விற்க முயன்ற பாஜக நிர்வாகி கைது
மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான 70 செண்ட் இடத்தை முறை கேடாக விற்பனை செய்ய முயன்ற கொடைக்கானல் பாஜக நகர தலைவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை சேர்ந்தவர் நல்ல சாமி. இவரது மனைவி ரங்கநாயகி. இவரது சகோதரர் சூரிய நாராயணன் . இவர் சிங்கப்பூரில் பணி செய்து வரும் நிலையில் அவர் அனுப்பும் பணத்தை வைத்து விருதுநகரில் பல்வேறு பகுதிகளில் ரங்கநாயகி இடம் வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதை அறித்த திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சார்ந்த பத்மநாபன் மற்றும் அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோர் மதுரை வண்டியூர் பகுதியில் ஸ்ரீநாச்சாரம்மன் அறக்கட்டளைக்கு சொந்தமான 70 செண்ட் இடம் விற்பனைக்கு இருப்பதாக கூறி ரங்கநாயகியை அணுகி உள்ளனர். அந்த நிலத்தை நீங்கள் வாங்கிக் கொள்வதாக இருந்தால் அறக்கட்டளையைச் சார்ந்த நிர்வாகிகளை அழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதை நம்பிய ரங்கநாயகி நிலத்தை வாங்குவதாக ஒப்புக்கொண்டு உள்ளார். இந்நிலையில் ரங்கநாயகியின் இல்லத்திற்கு அறக்கட்டளையின் நிர்வாகிகள் எனக் கூறி சதீஷ்குமார் சிலரை அழைத்துச் சென்று பேசியுள்ளார். அந்த 70 சென்ட் நிலத்தை வாங்குவதற்காக 34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் என பேசி அட்வான்ஸ் ஆக இரண்டு தவணைகளாக ரூபாய் 70 லட்சம் பணத்தை ரங்கநாயகி கொடுத்துள்ளார்.
70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்ட பத்மநாபன் மற்றும் அவரது மகன் சதீஷ்குமார் தொடர்ந்து நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ரங்கநாயகி நிலம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் அந்த நிலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மதுரை ஸ்ரீ கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரிய வநதது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாயகி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பணம் பெற்ற பத்மநாபன் அவரது மகன் சதீஷ்குமார் இதற்கு உடந்தையாக இருந்த சுமதி அங்கிராஜ் சந்திரன், குழந்தை செல்வம் ஆகிய 6 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் இந்த புகாரில் இரண்டாவது குற்றவாளியான சதீஷ்குமாரை கொடைக்கானலில் கைது செய்தனர். கைது செய்ப்பட்ட சதிஷ் குமார் கொடைக்கானல் நகர பாஜக தலைவராக இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மோசடி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பத்மநாபன் உட்பட மீதமுள்ள ஐந்து நபர்களை குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்