கொடைக்கானலில் வழி தவறி சுற்றும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம்...!
’’பேத்துப்பாறை கிராமத்திற்குள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக காட்டு யானை முகாமிட்டதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது’’
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சுவீடு, பள்ளங்கி கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு கூட கொடைக்கானல் பேத்துப்பாறை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பலா, காப்பி, ஆரஞ்சு, வாழை உள்ளிட்ட மலை பயிர்களை சேதப்பட்டுத்தியுள்ள நிலையில் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளதால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று மாலை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக ஒற்றை காட்டு யானை பேத்துப்பாறை கிராமத்திற்குள் முகாமிட்டு ஊருக்குள் உலா வந்ததால் அப்பகுதி கிராம மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ஊருக்குள் வந்த ஒற்றை காட்டு யானையை ஐயப்பா என்று கூறிய பொதுமக்கள் ஊரை விட்டு வனப்பகுதிக்குள் போ என்று சத்தம்போட்டு விரட்டினர். இதனால் ஊருக்குள் வந்த காட்டு யானை பொது மக்களை விரட்டாமல் அமைதியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனை தொடர்ந்து பேத்துப்பாறை கிராம வீதிகளில் உலா வந்த காட்டு யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது,
மேலும் பேத்துப்பாறை கிராமத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையை நிரந்தரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஒற்றை காட்டு யானை திடீரென்று பேத்துப்பாறை கிராமத்தில் உலா வந்ததால் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவி வருகிறது.
வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் வந்து பொதுசொத்துக்களை சேதப்படுத்துவதுடன் அவ்வப்போது உயிர்பலியையும் ஏற்படுத்தி வருகிறது. காட்டு யானை தாக்கியதில் கடந்த 2 வருடத்திற்குள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கொடைக்கனாலுக்குச் செல்ல மலை வழிமார்க்கமாக செல்லும் சூழ் நிலையில் வனப்பகுதிகளிலிருந்து வெளியேறும் காட்டுயானை மலைவழிச்சாலையாக செல்லும் வாகன ஓட்டிகளை வழிமறிப்பதும், அச்சுறுத்தி வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!
100 சதவீதம் பேருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொடைக்கானல் நகராட்சி சாதனை...!