''இந்த வேளாண் பட்ஜெட்ல எங்களுக்கு ஒன்னுமே இல்ல'' - புலம்பும் தென் மாவட்ட விவசாயிகள்!
தமிழக அரசால் இன்று வெளியான வேளாண் பட்ஜெட்டில் தென் மாவட்டங்களுக்கு எந்த வளர்ச்சி திட்ட நிதி அறிவிப்பு இல்லை என விவசாயிகள்
கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி கடந்த அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சராக இருந்த ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அமர்ந்தது. இதனை அடுத்து தி. மு. க தலைமையில் தமிழகத்தில் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார். இது தமிழக சட்டசபை வரலாற்றில் தாக்கல் செய்யப்பட்ட முதல் காகிதமில்லா பட்ஜெட் அதாவது இ-பட்ஜெட் ஆகும்.
இந்த நிலையில் 2021-22ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இன்று தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் முதல்முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் சென்னை , திருச்சி , கோவை , சேலம் , திருப்பூர் என ஒரு சில மாவட்டங்களில் வேளாண் வளர்ச்சி பணிகள் செய்வது குறித்து பட்ஜெட் அறிவிக்கப்பட்டது. ஆனால் தென் மாவட்டங்களில் வேளாண்மை வளர்ச்சி குறித்து எந்தவித ஒரு அறிவிப்பு இல்லாதது தென் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து பழனிச்செட்டிபட்டி வரையில் சுமார் 14707 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் வருடத்திற்கு இரண்டு போகம் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பருவ நிலை மாற்றம் கால சூழலுக்கு ஏற்ற விதை நெல் இல்லாத நிலையில் தற்போது ஒரு போகம் நெல் விவசாயம் செய்யும் சூழலுக்கு வந்துள்ளது. தேனி மாவட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் இருக்கும் தேனி , திண்டுக்கல் , சிவகங்கை, ராமநாதபுரம் , மதுரை உள்ளிட்ட மக்களின் குடி நீர் ஆதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அது குறித்த எந்தவித ஒரு அறிவிப்பும் இல்லாத நிலை உள்ளது. அதே போல் தமிழ்நாட்டில் மொத்தமாக ஆறுகள் , குளங்கள் , ஏரிகள் என தூர் வார 250 கோடி ருபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியான நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையை தூர் வார தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என கூறுகின்றனர்.
அதே போல் 100 நாள் வேலைத்திட்டம் என்பது 150 நாளாக உயர்த்தப்பட்டது யாருக்கும் பயனற்றது எனவும் தெரிவிக்கின்றனர், காரணம் இந்த திட்டம் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என்பதும் இது போன்ற திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் செலவிடுவதைவிட பயனுள்ள திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தால் தமிழக அரசின் நிதி வீன் விரயம் ஆகாது எனவும் கூறுகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கை சுற்றி திராட்சை , வாழை , தென்னை உள்ளிட்ட விவசாயம் அதிகளவில் செய்வதால் இந்த பகுதியில் பதப்படுத்தும் தொழிற்சாலை நிறுவ வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
தற்போது வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில் இது போன்ற அறிவிப்புகள் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறுகின்றனர் இப்பகுதி விவசாயிகள். மேலும் பெரியகுளம் , கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக விளையும் மதிப்புக்கூட்டும் பொருளாக பார்க்கப்படும் வாழை , மா உள்ளிட்ட விவசாயங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் எனவும் ஒட்டுமொத்தத்தில் இன்று வேளாண் திட்டங்களுக்கு குறித்து வெளியான பட்ஜெட் தென் மாவட்ட மக்களின் குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.