கேரள கழிவுகள் தமிழக கடல் பகுதிகளில் கொட்டப்படுகிறதா? - தமிழக அரசு விளக்கம்
கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக படகில் வந்து தமிழகத்தில் கழிவுகளை திறந்து விடுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், கோழி கழிவுகள், இறைச்சி கழிவுகளை ஆகியவற்றை கேரள எல்லையில் உள்ள தமிழக பகுதியில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் நெல்லை, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு இயற்கை வளமும் சீரழிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் பல்வேறு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும் நெல்லை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக லாரி, லாரியாக மருத்துவ கழிவுகள் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டது.
இதனையடுத்து 20க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கழிவுகள் அகற்றப்பட்டு மீண்டும் கேரளாவி்ற்கே கொண்டு செல்லப்பட்டது. மேலும் கழிவுகள் தமிழகத்திற்கு கொண்டு வந்த நபர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கேரள கழிவுகளை தமிழக கடல் பகுதியில் கொட்டுவதாக வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக வைரல் ஆனது. மேலும் தமிழகம் என்ன குப்பை தொட்டியா.? என விமர்சித்து வீடியோ பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதனையடுத்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அந்த வீடியோ தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், "தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பைத் தொட்டியா? தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது" என்று கடலில் படகில் இருந்து கழிவுகளை திறந்துவிடும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
இது தமிழ்நாடு அல்ல மற்றும் ஏ ஐ மூலம் உருவாக்கப்பட்ட காணொளியாகும். கடலில் கழிவுகளை கலப்பது தொடர்பாக உருவாக்கப்பட்ட இக்காணொளி அலி அட்டியூன் என்ற youtube பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் இதுபோல் ஏ ஐ மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு காணொளிகள் பதிவாகியுள்ளன. எனவே இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பாக கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகள் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி, சுத்தமல்லி, முக்கூடல் உள்பட சில இடங்களில் சில மாதங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் மருத்துவ கழிவுகளை முழுமையாக அகற்றுமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அந்த கழிவுகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.இந்த நிலையில்தான் கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக படகில் வந்து தமிழகத்தில் கழிவுகளை திறந்து விடுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இதே வேலையில் கேரளாவின் தமிழக எல்லை பகுதிகளான பல்வேறு பகுதிகளில் கேரள கழிவுகளை தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதும், இதுகுறித்த புகார்களும் பல்வேறு முறை எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு இதற்கான நிரந்தர தீர்வை இரு மாநில அரசுகளும் எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

