மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து தொடர்பாக காஞ்சி பக்தரின் RTI கேள்வி - 70 தூண்களின் தற்போதைய நிலை குறித்து முறையாக பதில் தராத கோயில் நிர்வாகம்
ஆவணங்கள் இல்லாமல் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு வந்த நிலையில் , கடைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 64 ஆயிரத்து 65 ரூபாய் வாடகையாக நிர்ணயக்கப்பட்டது ஆர்.டி.ஐ விசாரணையில் அம்பலம்
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி இரவு கிழக்கு கோபுர வாசல் அருகேயுள்ள வீர வசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அப்பகுதியின் இருபுறங்களிலும் இருந்த 36 கடைகள் எரிந்து சாம்பலானது. தற்போது வீரவசந்தராயர் மண்டபத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் வீர வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் காஞ்சிபுரத்தை சேர்ந்த டெல்லி பாபு என்பவர் பெற்ற தகவல் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபத்தில் தொன்மையான கிரானைட் வகையை 70 தூண்கள் சேதமடைந்துள்ளன. மேலும் சேதம் அடைந்த தூண்களை அப்புறப்படுத்த 30 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடந்த சமயத்தில் வீர வசந்தராயர் மண்டபத்தில் கடைகள், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்கு விடப்பட்டுள்ளது, ஆனால் வாடகைக்கு விடப்பட்டதற்கான ஆவணங்கள் ஏதும் திருக்கோயில் அலுவலகத்தில் இல்லை எனவும், தீ விபத்து சம்பவம் நடைபெற்றபோது 68 கண்காணிப்பு கேமராக்கள் அப்பகுதியில் இருந்து என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டதற்கு கோயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
மேலும் , தீ விபத்துக்குப் பிறகு எரிந்து விழுந்தில், மண்டபத்தில் 13 தூண்கள் முழுமையாக இருந்தது எனவும், 70 தூண்கள் சேதமடைந்தது, மேலும் ஆவணங்கள் இல்லாமல் கடைகள் வாடகைக்கு விடப்பட்டு வந்த நிலையில் , கடைகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு 64 ஆயிரத்து 65 ரூபாய் வாடகையாக நிர்ணயக்கப்பட்டது, எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளன.
இதுகுறித்து சமூக ஆர்வலர் டெல்லி பாபு நம்மிடம் கூறுகையில், தகவல் உரிமைச் சட்டத்தின் படி நாம் கேட்ட கேள்விக்கு, ஆவணங்கள் இல்லாமல் கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களின்படி மண்டபம் முத்து வீரப்ப நாயக்கரால் 1611 ஆண்டு கட்டப்பட்டது, எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு தீ விபத்தின்போது சேதமடைந்த 70 கற்தூண்களின் தற்போதைய நிலை என்ன? என்பது குறித்த கேள்விக்கு கோயில் நிர்வாகம் உரிய பதில் அளிக்கவில்லை. அதற்கு மாறாக 2018 ஆம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டபோது சேதமடைந்த கற்தூண்களின் அப்போதைய பழைய புகைப்படத்தை மட்டுமே தான் அனுப்பி வைத்துள்ளார்கள் என தெரிவித்தார். சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுவரும் புனரமைப்பு பணிகள் முடிப்பதற்கு சுமார் மூன்று ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.