(Source: ECI/ABP News/ABP Majha)
உலக விண்வெளி வாரம் கொண்டாடும் விதமாக இஸ்ரோவின் ராக்கெட் மாதிரிகள் கண்காட்சி - எங்கு தெரியுமா?
விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சார்பில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி கண்காட்சி நடைபெற்றது.
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் ஷார் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் சார்பில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் விண்வெளி கண்காட்சி நடைபெற்றது.
உலக விண்வெளி வாரம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10 வரை நடத்தப்படும் என்று 1999 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அறிவித்தது. 'விண்வெளி மற்றும் காலநிலை மாற்றம்' என்பதுதான் இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) கீழ் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் SHAR உலக விண்வெளி வாரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் கொண்டாடி வருகிறது .
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துடன் சதீஷ் தவான் விண்வெளி மையம் SHAR இணைந்து அக்டோபர் 9ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் உலக விண்வெளி வாரத்தை கொண்டாட உள்ளனர். நிகழ்ச்சியில் இஸ்ரோவின் சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் ஷார் விஞ்ஞானி மற்றும் இயக்குனர் ராஜராஜன் கண்காட்சியை தொடங்கி வைத்து மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார்.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநதம், பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் மற்றும் இஸ்ரோவின் சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் ஷார் பொது மேலாளர் லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வானியல், விண்வெளி, ராக்கெட்டுகள், செயற்கைக்கோள் மற்றும் பல தசாப்தங்களாக இஸ்ரோவின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய பல்வேறு அம்சங்களைக் காட்டும் ராக்கெட் மாதிரிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான போட்டிகளும் நடைபெறுகின்றன.