(Source: ECI/ABP News/ABP Majha)
தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
''போடி, தேனி, கம்பம் உள்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் பலர் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்''
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வந்தாலும் சென்ற மாதம் ஆரம்பத்தில் பாதிப்பு எண்ணிக்கை ஓரிலக்க எண்ணாக இருந்தது, மாத கடைசியில் இரண்டு இலக்க எண்ணாக மாறியது. மீண்டும் தற்போது பாதிப்பு எண்ணிக்கை இந்த மாதம் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையில் ஓரிலக்க எண்ணாகவே உள்ளது. உயிரிழப்புகளும் இல்லை என்பது கூடுதல் ஆறுதல்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசிகள் செலுத்துவது குறித்தும் தடுப்பூசி போட்டு கொள்வது குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்களின் வசதிக்காக மாவட்டங்களில் பல்வேறு நகராட்சிகள், ஊராட்சி மன்றங்கள், பேருராட்சி அலுவலகங்கள் மூலமாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே மாவட்டம் தோறும் 5 கட்டங்களாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. தற்போது நேற்று 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் 410 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்காக 81 ஆயிரத்து 990 கோவிஷீல்டு தடுப்பூசி, 4 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசி என மொத்தம் 85 ஆயிரத்து 990 டோஸ் தடுப்பூசிகள் முகாம்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. முகாம் நடந்த இடங்களில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். போடி நகராட்சி பகுதிகளில் நடந்த முகாம்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். கோவேக்சின் தடுப்பூசி குறைவான அளவிலேயே தேனி மாவட்டத்தில் இருப்பு இருந்ததால் பெரும்பாலான முகாம்களில் இந்த தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது.
போடி, தேனி, கம்பம் உள்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் பலர் கோவேக்சின் தடுப்பூசி கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 50 ஆயிரத்து 319 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் முதல் தவணையாக 14 ஆயிரத்து 394 பேரும், 2-வது தவணையாக 35 ஆயிரத்து 925 பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 246 ஆக உயர்ந்தது. இதில், முதல் தவணை 6 லட்சத்து 35 ஆயிரத்து 60 பேரும், 2-வது தவணை 3 லட்சத்து 186 பேரும் செலுத்தியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )